மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை நிபந்தனையின்றி திரும்ப பெற வேண்டும்.. எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தல்! - Seithipunal
Seithipunal


உரிமைக்காக போராடிய பல்கலைக்கழக மாணவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை நிபந்தனையின்றி திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா வலியுறுத்தியுள்ளார்.
 
காலாப்பட்டு ஒன்றிய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகார் குறித்து விசாரணை கமிட்டி அமைக்க வலியுறுத்தி ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி கைது செய்து வழக்கு பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கதாகும். மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற்று, பாலியல் புகார் குறித்து உரிய கமிட்டி அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இல்லை என்றால் பல்கலைக்கழக மாணவர்களின் உரிமைக்காக திமுக துணை நிற்கும் என்று எச்சரிக்கிறேன்.
 
புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா அவர்கள் விடுத்துள்ள செய்தி அறிக்கை : –
 புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கும் ஒன்றிய பல்கலைக்கழகத்தின் காரைக்கால் கிளையில் பயிலும் முதுகலை மற்றும் ஆராய்ச்சி மாணவிகள் துறை சார்ந்த பேராசிரியர்கள் பாலியல் தொந்தரவு செய்வதாகவும், மீறினால் இன்டர்னல் மதிப்பெண்களை வழங்க மாட்டேன் என்று மிரட்டுவதாகவும் கல்லூரி மாணவி ஒருவர் இணையத்தில் பேசி அனைவரையும் பதறச் செய்தார். அப்படி இருந்தும் பல்கலைக்கழக நிர்வாகம் இது தொடர்பாக எந்தவித விசாரணைக் கமிட்டியும் அமைக்காமல் மெத்தனமாக இருந்துள்ளது.

இதனிடையே காலாப்பட்டில் உள்ள ஒன்றிய பல்கலைக்கழகத்தில் துறை பேராசிரியர் ஒருவர் மீது ஆராய்ச்சி மாணவி ஒருவர் அதே குற்றச்சாட்டை முன்வைத்து விசாரணைக் கோரி நிர்வாகத்திடம் மனு அளித்துள்ளார். இப்படி ஒன்றிய பல்கலைக்கழக பேராசிரியர்கள் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்கள் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இப்படி பல்வேறு குற்றச்சாட்டுகளை மாணவிகள் சுமத்தியும் பல்கலைக்கழக துணைவேந்தர் அவர்கள் இதுகுறித்து மானியக் குழு பரிந்துரைத்துள்ள விசாரணைக் கமிட்டி அமைக்காமல் குற்றச்சாட்டுக்கு ஆளான பேராசிரியர்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை கையாண்டு இருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
இதனிடையே பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை கண்டித்தும், புகாருக்கு ஆளாகியுள்ள பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், 09.10.2025 அன்று மாலை துணைவேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அமைதியான வழியில் பல்கலைக்கழக மாணவர்கள் தங்கள் உரிமைக்காக போராட்டம் நடத்தினார்கள்.
 
பல்கலைக்கழக நிர்வாகம் தரப்பில் உறுதியான நடவடிக்கை இல்லாத காரணத்தால் மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது. இதனிடையே நள்ளிரவு 2 மணி அளவில் பல்கலைக் கழக வளாகத்தில் அத்துமீறி நுழைந்த காவல்துறை போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காட்டுமிராண்டித் தனமாக தாக்கி, வலுக்கட்டாயமாக மாணவர்கள் கதற, கதற கைது செய்து இருக்கிறது. இதனால் பல்கலைக்கழக வளாகம் போர்க்களமாக காட்சியளித்தது. இந்த செயலை இணையத்தில் பார்த்த சக மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, நள்ளிரவில் பல்கலைக்கழக வளாகம் மற்றும் காலாப்பட்டு காவல் நிலையத்தில் ஒன்று திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட 6 மாணவிகள் உட்பட 24 மாணவர்கள் மீது அரசு அதிகாரியை அடைத்து வைத்தல், அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் மாணவர்கள் மத்தியில் மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க கோரி ஜனநாயக முறையில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது வழக்குப் பதிவு செய்தல் போன்ற சம்பவம் தொடர்ந்தால் புதுச்சேரியில் உள்ள மற்ற கல்லூரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபடுவார்கள். அப்படி நடந்தால் புதுச்சேரி மாநிலம் போர்க்களமாக மாறி சட்டம்–ஒழுங்கை சீர்குலைக்கும் என்பதை பல்கலைக்கழக நிர்வாகமும், புதுச்சேரி அரசும் உணர வேண்டும்.

ஆகவே, மாணவர்களின் உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். பல்கலைக்கழக மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து பல்கலைக்கழக மானியக் குழு பரிந்துரைத்துள்ள விசாரணைக் கமிட்டி அமைத்து நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும். மாணவிகளின் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட பேராசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கழக நிர்வாகம் உறுதியாக இருக்க வேண்டும். அதைவிடுத்து, புகார் அளித்த மாணவர்கள் மீது அதிகார துஷ்பிரயோகத்தை பயன்படுத்தி அடக்கு முறையை கையாண்டால் அதை புதுச்சேரி மக்களும், திராவிட முன்னேற்றக் கழகமும் வேடிக்கை பார்க்காது. மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்கை உடனடியாக திரும்ப பெற்று மாணவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும். இல்லையென்றால் பல்கலைக்கழக மாணவர்களுக்கு துணையாக தி.மு.கழகம் களத்தில் இறங்கும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The case filed against the students should be withdrawn unconditionally Opposition leader emphasizes


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->