பிரம்மனின் நாபிக்கமலத்திலிருந்து வந்ததாக கூறும் பிரம்ம கமலம் மலர்: மேட்டுப்பாளையத்தில் பூத்துள்ள நிலையில் பொதுமக்கள் வழிபாடு..!
The Brahma Kamala which blooms only once a year has bloomed in Mettupalayam
ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் அதுவும் இரவில் மட்டுமே பூக்கும் அரிய மற்றும் மணம் கொண்டது பிரம்ம கமலம் பூ. இது நிஷாகந்தி மலர் என்றும் அழைக்கப்படுகின்றது. இந்த மலரானது அந்தி சாயும் மாலை பொழுதில் விரிந்து இரவு முழுவதும் தென்றல் காற்றோடு கலந்து மணம் வீசி, விடியற்காலையில் வாடிவிடும் தன்மை கொண்டது.
அதாவது இந்த பிரம்ம கமலம் மலர் பிரம்மனின் நாபிக்கமலத்திலிருந்து வந்ததாகவும் சித்தர்கள் வழிபட்டதால் இந்த பூவுக்கு பிரம்ம கமலம் என்று பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த பூ பூத்திருக்கும் போது அதன் முன் நின்று என்ன வேண்டினாலும் அது நடக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் வீடுகளில் வளர்க்கப்பட்டு, இந்த பூ பூக்கும்போது அதற்கு பூஜைகள் செய்து வழிபாடு மேற்கொண்டு வருகின்றனர்.

ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் பூக்கும் இந்த பூவின் வாசனை அனைவரையும் கவர்வதாக இருக்கும். நள்ளிரவில் வெள்ளை நிறத்தில் பூக்கும் இதன் மலர்கள் விடிவதற்குள் வாடி விடும். இந்த மலர் அதிக அளவில் ஆக்சிஜனை வெளியிடும் தன்மை கொண்டது. இந்த தாவரத்தின் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிட்டும் என கூறப்படுகிறது.
அத்துடன் சளி, இருமல், காய்ச்சல், கல்லீரல் அழற்சி, சிறுநீர்ப்பாதை தொற்றுகள், புண்கள், நரம்புக்கோளாறுகள் மற்றும் மாதவிடாய் தொடர்பான பிரச்சினைகளுக்கு இந்த பூவின் பொடி மருந்தாக பயன்படுகிறது. கள்ளி வகையைச் சேர்ந்த பிரம்ம கமலத்தின் இலைகளை நட்டு வைத்தாலே வளர்ந்து விடும்.
இந்த மலர் தற்போது மேட்டுப்பாளையம் நாடார் காலனி பகுதியில் உள்ள வடிவேலு (48) என்பவர் வீட்டில் நேற்றிரவு மலர்ந்துள்ளது. இதையறிந்த பொதுமக்கள் வடிவேலுவின் வீட்டிற்கு திரண்டு சென்று பார்வையிட்டதோடு, மலருக்கு பூஜை செய்து வழிபட்டுள்ளனர்.
English Summary
The Brahma Kamala which blooms only once a year has bloomed in Mettupalayam