அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க மோதிரம்: செப்டம்பர் 15 முதல் 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' தொடக்கம்!
Thaimaman Thanga Mothiram Thittam CM Vijay to Launch 1-Gram Gold Ring Scheme for Newborns in Govt Hospitals
தமிழக அரசு, முதலமைச்சர் விஜய் தலைமையில் 'வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டங்களுக்கு' முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் ஏழை எளிய தாய்மார்களையும் அவர்களின் குழந்தைகளையும் கௌரவிக்கும் வகையில், ஒரு புதிய வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் நலத்திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்திற்கு 'தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அரசாணை தற்போது வெளியிடப்பட்டு, திட்டப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகளை உடனடியாகக் கோருவதற்கு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகப் பண்பாட்டின்படி, ஒரு குழந்தை பிறக்கும்போது தாயின் சகோதரரான தாய்மாமன் சீர் செய்து தங்க நகை வழங்கி அன்போடு வரவேற்பது நீண்டகால மரபாக உள்ளது. இந்தத் தமிழர் மரபைப் பிரதிபலிக்கும் வகையில், தமிழக அரசே இனி ஒவ்வொரு குழந்தைக்குமான தாய்மாமனின் பங்கை ஏற்கும். அன்பும் அக்கறையும் நிறைந்த வரவேற்பின் அடையாளமாக, பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரத்தை அரசு வழங்க உள்ளது. தமிழகத்தில் நிரந்தரமாக வசிக்கும் குடும்பங்களைச் சேர்ந்த, அரசு மருத்துவமனைகளில் பிரசவிக்கும் தாய்மார்களின் குழந்தைகளுக்கு மட்டுமே இந்தத் திட்டம் முழுமையாகப் பொருந்தும்.
இந்தத் திட்டம் ஜூன் 22, 2026 முதல் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் பயன்பெறும் வகையில் கணக்கிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வத் தொடக்க விழா, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15, 2026 அன்று முதலமைச்சர் விஜய் அவர்களால் முறைப்படி தொடங்கி வைக்கப்படும். இந்த மாபெரும் திட்டத்தை மாநிலம் முழுவதும் தொய்வின்றிச் செயல்படுத்துவதற்காகத் தமிழக அரசு ஆண்டுதோறும் 755.83 கோடி ரூபாய் நிதியை பிரத்தியேகமாக ஒதுக்கீடு செய்துள்ளது.
ஏற்கனவே தமிழக அரசு கர்ப்பிணிப் பெண்களுக்கான நிதியுதவி, இலவசப் பிரசவம், ஊட்டச்சத்து வழங்குதல் மற்றும் கர்ப்பிணிகளையும் குழந்தைகளையும் கண்காணிக்கும் பிக்மி (PICME) மென்பொருள் போன்ற பல்வேறு தாய்-சேய் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தி வருகிறது. இந்த வரிசையில் தற்போது இணைந்துள்ள தாய்மாமன் தங்க மோதிரத் திட்டம், அரசு சுகாதாரச் சேவைகள் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும். அதே வேளையில், அரசு மருத்துவமனைகளில் நிகழும் பிரசவங்களை ஊக்குவித்து, தாய்மையின் மகிழ்ச்சியைக் கொண்டாடும் ஒரு உன்னதமான முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது
.
English Summary
Thaimaman Thanga Mothiram Thittam CM Vijay to Launch 1-Gram Gold Ring Scheme for Newborns in Govt Hospitals