உசிலம்பட்டியை முதல்வர் விஜய் தேர்வு செய்தது ஏன்? தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழாவின் பின்னணி!
Thaaimaman Gold Ring Scheme Why Chief Minister Vijay Chose Usilampatti for the Grand Launch
அரசு மருத்துவமனைகளில் பிறந்து இல்லம் திரும்பும் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் இலவசமாகத் தங்க மோதிரம் வழங்கும் "தாய்மாமன் தங்க மோதிரம்" என்ற மகத்தான திட்டத்தை வரும் செப்டம்பர் 28-ஆம் தேதி முதல்வர் விஜய் தொடங்கி வைக்கவுள்ளார்.
ஆரம்பத்தில் இத்திட்டத் தொடக்க விழா தலைநகரான சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தற்போது மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் விழாவை நடத்தத் தீவிர ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காகப் பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்கும், விழா அமைவிடத்தைத் தேர்வு செய்வதற்கும் காவல்துறையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.
திடீரெனத் தலைநகரை விடுத்து உசிலம்பட்டியைத் தேர்வு செய்ததன் பின்னணியில் பல்வேறு சமூக மற்றும் அரசியல் காரணங்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கிராமப்புறங்களில் 'தாய்மாமன்' என்ற உறவுமுறை மிகுந்த மரியாதையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது.
குறிப்பாகப் பெண்களையும் குழந்தைகளையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டம், கிராமப்புறப் பெண்கள் மத்தியில் மிக எளிதாகவும் நேரடியாகவும் சென்றடையும் என்ற நோக்கில் இந்த இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், இதன் பின்னணியில் ஆளுங்கட்சியான த.வெ.க-வின் முக்கியத் தேர்தல் வியூகங்களும் அடங்கியுள்ளன. கிராமப்புறப் பகுதிகளில் த.வெ.க-வின் கட்சி அமைப்பை மேலும் வலுப்படுத்தவும், மக்கள் மத்தியில் நேரடிச் செல்வாக்கை அதிகரிக்கவும் முதல்வர் விஜய்யின் இந்த நேரிடைப் பயணம் பெரிதும் உதவும் எனக் கருதப்படுகிறது.
அதுமட்டுமின்றி, உசிலம்பட்டி பகுதி அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமாரின் சொந்த ஊராகும். முதல்வர் நேரடியாகத் தனது சொந்தத் தொகுதிப் பகுதிக்கு வருகை தருவது, அப்பகுதியில் கட்சியின் செல்வாக்கையும் அமைச்சரின் அரசியல் தளத்தையும் மேலும் பலப்படுத்தும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
English Summary
Thaaimaman Gold Ring Scheme Why Chief Minister Vijay Chose Usilampatti for the Grand Launch