தென்காசி கணவன் படுகொலை வழக்கு: கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவியே தீர்த்துக்கட்டிய கொடூரம் - 26 சிசிடிவி கேமராக்கள் மூலம் துப்புதுலக்கிய காவல்துறை!
Tenkasi Murder Case Solved Wife and Lover Arrested for Brutal Bludgeoning of Husband Over Illicit Affair
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள பண்பொழி தோட்டத்தில் கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி, நபர் ஒருவர் பலத்த காயங்களுடன் படுகொலை செய்யப்பட்டுப் பிணமாகக் கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த இலத்தூர் காவல்துறையினர், உடலைக் கைப்பற்றித் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.
சிசிடிவி தடயமும் கார் தகவலும்:
இக்கொலை வழக்கின் கொலையாளியைக் கண்டறியத் துணை சூப்பிரண்டு அதியமான் தலைமையில், இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படைப் போலீஸார் பண்பொழி-தென்காசி சாலையில் பொருத்தப்பட்டிருந்த 26 கண்காணிப்பு (CCTV) கேமராக்களை தீவிரமாக ஆய்வு செய்தனர். அதில் சந்தேகத்திற்கு இடமாக உலா வந்த கார் ஒன்றின் பதிவு எண்ணை வைத்து விசாரித்தபோது, அது விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த வாடகை கார் என்பது தெரியவந்தது.
கள்ளக்காதல் பின்னணியும் கொடூரத் திட்டமும்:
காவல்துறையினரின் அடுத்தகட்ட விசாரணையில், படுகொலை செய்யப்பட்டவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் ரோலிங் ஷட்டர் வேலை பார்த்து வந்த அப்துல் ரகுமான் (50) என்பதும், அவரைக் காரில் அழைத்துச் சென்று கொலை செய்தது தென்காசியைச் சேர்ந்த இசை இந்திரகுமார் (36) என்பதும் அம்பலமானது. இசை இந்திரகுமார் வேலை பார்த்த உணவகத்திற்கு அப்துல் ரகுமான் குடும்பத்துடன் சென்றபோது, அவருக்கும் அப்துல் ரகுமானின் மனைவி அம்சா நிஷாவுக்கும் (43) இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. சமீபகாலமாக வேலையின்றி வீட்டில் இருந்த கணவன் தங்களது தொடர்பிற்கு இடையூறாக இருந்ததால், அவரைத் தீர்த்துக்கட்ட இருவரும் சதித்திட்டம் தீட்டியுள்ளனர்.
அரங்கேறிய படுகொலை:
திட்டப்படி, பண்பொழியில் உள்ள தோட்டத்தில் ரோலிங் ஷட்டர் அளவெடுக்க வேண்டும் எனக் கூறி அப்துல் ரகுமானை இசை இந்திரகுமார் காரில் அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து இரும்புக் கம்பியால் தாக்கியும், தலையில் கல்லைப் போட்டும் கொடூரமாகக் கொலை செய்துவிட்டுத் தப்பியுள்ளார். இவ்வழக்கில் துரிதமாகச் செயல்பட்ட தனிப்படைப் போலீஸார், கள்ளக்காதலன் இசை இந்திரகுமார் மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த மனைவி அம்சா நிஷா ஆகிய இருவரையும் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இசை இந்திரகுமார் பாளையங்கோட்டை மத்திய சிறையிலும், அம்சா நிஷா கொக்கிரகுளம் பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
English Summary
Tenkasi Murder Case Solved Wife and Lover Arrested for Brutal Bludgeoning of Husband Over Illicit Affair