'சோஃபா மாடல்' என கிண்டல்...! - சட்டசபையில் வன்னி அரசு பேச்சால் தி.மு.க. அமளி...!
Taunted sofa model DMK stirs up trouble over Vanni government speech assembly
தமிழ்நாடு சட்டசபையில் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னி அரசு முன்வைத்த கருத்துகள் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கடும் விவாதத்தை ஏற்படுத்தின. தலித் பிரதிநிதித்துவம், அரசியல் அதிகாரப் பகிர்வு மற்றும் திராவிடக் கட்சிகளின் செயல்பாடுகள் குறித்து அமைச்சர் எழுப்பிய கேள்விகளால் பேரவையில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க. உறுப்பினர்கள் பலர் ஒரே நேரத்தில் எழுந்து நின்று முழக்கமிட்டதால், சட்டசபையில் கூச்சல், குழப்பம் மற்றும் அமளி ஏற்பட்டது.பேரவையில் உரையாற்றிய அமைச்சர் வன்னி அரசு, தலித் சமூகத்தின் அரசியல் உரிமைகள், ஆட்சியில் அதிகாரப் பங்களிப்பு மற்றும் பிரதிநிதித்துவம் குறித்து காரசாரமான கருத்துகளை முன்வைத்தார்.

தலித் சமூகத்தைச் சேர்ந்த தன்னை சட்டமன்றத்தில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்க விடாமல் தடுப்பதாக குற்றம்சாட்டிய அவர், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு முக்கிய கட்சிகளின் அணுகுமுறைகள் குறித்தும் கேள்வி எழுப்பினார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதிலும், தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அந்தக் கட்சிக்கு அமைச்சரவையிலும் அதிகார அமைப்புகளிலும் உரிய பங்கு ஏன் வழங்கப்படவில்லை என அமைச்சர் கேள்வி எழுப்பினார்.
மேலும், தலித் தலைவர்களை பொதுத் தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்துவதை மட்டும் சுட்டிக்காட்டி சமூகநீதி குறித்து பெருமை பேசுவது போதுமானதல்ல என்றும் அவர் தெரிவித்தார். தலித் தலைவர்களை சம உரிமையுடன் அணுகுவதற்கு பதிலாக பரிதாபத்தின் அடிப்படையில் அணுகுவதைப் போன்ற தோற்றத்தை இது ஏற்படுத்துவதாகவும் அமைச்சர் விமர்சித்தார்.விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்றத்தில் 2 உறுப்பினர்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு அவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளித்து அமைச்சரவையில் இடம் வழங்கியுள்ளதாக அமைச்சர் வன்னி அரசு தெரிவித்தார்.
இதன்மூலம் சமூகநீதியை நடைமுறைப்படுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அமைச்சரின் இந்த கருத்துக்கு தி.மு.க. உறுப்பினர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்தது. அமைச்சர் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்தபோது, தி.மு.க. உறுப்பினர்கள் “சோஃபா மாடல்” என கிண்டலாக முழக்கமிட்டனர்.இதனால் பேரவையில் சலசலப்பு அதிகரித்தது. அமைச்சரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. உறுப்பினர்கள் பலர் தங்களது இருக்கைகளில் இருந்து எழுந்து நின்று ஒரே நேரத்தில் முழக்கங்களை எழுப்பினர்.
அமைச்சர் வன்னி அரசுவை தொடர்ந்து பேசவிடாமல் தி.மு.க. உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அவையில் கடும் கூச்சல் நிலவியது. இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தைப் பரிமாற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து பேரவையின் இயல்பான நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டது.சில நிமிடங்கள் நீடித்த இந்த பரபரப்பான சூழலால் சட்டசபை களைகட்டியது. தலித் பிரதிநிதித்துவம் மற்றும் சமூகநீதி குறித்த அமைச்சரின் கருத்துகள், ஆளுங்கட்சி–எதிர்க்கட்சி இடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.
English Summary
Taunted sofa model DMK stirs up trouble over Vanni government speech assembly