லாரி உரிமையாளர்கள் போராட்டத்தால் டாஸ்மாக் மது விநியோகம் நிறுத்தம்..!!
Tasmac liquor distribution stopped due to truck owners protest
திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை குடோனில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில்உள்ள 400க்கு மேற்பட்ட டாஸ்மாக் கடைகளுக்கு மதுபானம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. நாள்தோறும் காலை 6 மணிக்கு லாரிகள் அனுமதிக்கப்பட்டு 10 மணி அளவில் மதுபானங்கள் ஏற்றப்பட்டு லாரிகள் வெளிய அனுப்பப்படும். அதன் பிறகு மூன்று மாவட்டங்களில் உள்ள மதுபான கடைகளுக்கு மது விநியோகம் செய்யப்படும்.
இந்த நிலையில் இன்று காலை முதல் திருமழிசை குடோனின் முன்பு லாரி உரிமையாளர்களின் போராட்டம் நடைபெற்று வருகிறது. பொதுவாக டாஸ்மாக் குடோனில் இருந்து கடைகளுக்கு மதுபானம் லாரிகள் மூலம் வினியோகம் செய்ய ஒப்பந்தமானது போடப்படும். இரண்டு மாதங்களுக்கு முன்பே இந்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் தற்காலிக அடிப்படையில் மது விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கு முன்பு பாஸ்கர் என்பவர் ஒப்பந்த முறையில் மூன்று மாவட்டங்களுக்கும் மது விநியோகம் செய்து வந்த நிலையில் இன்று காலை முதல் புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நண்பர் சச்சிதானந்தம் என்பவர் தான் ஒப்பந்ததாரர் என கூறிய நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் டாஸ்மாக் குடோனில் கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக பழைய ஒப்பந்ததாரர் பாஸ்கர் சார்பில் கொண்டுவரப்பட்ட வாகனங்கள் டாஸ்மாக் குடோனினுள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் புதிய ஒப்பந்ததாரரின் லாரிகளை வெளியே அனுமதிக்காமல் பழைய ஒப்பந்ததாரர் பாஸ்கரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் டாஸ்மாக் குடோன் முன்பு போலீசார் குவிக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டாஸ்மாக் நிறுவனத்தின் பழைய ஒப்பந்ததாரர் பாஸ்கர் என்பவருக்கு 4 கோடி ரூபாய் நிலுவைத் தொகை டாஸ்மாக் நிர்வாகம் பாக்கி வைத்திருப்பதாகவும், அந்த பழைய நிலுவைத் தொகையை டாஸ்மாக் நிர்வாகம் செலுத்தினால் புதிய ஒப்பந்ததாரரின் லாரிகளை வெளியே செல்ல அனுமதிப்பதாகவும் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் மதுபான ஏற்ற செல்லும் லாரி ஓட்டுனர்கள் மற்றும் மது பானம் இறக்குவோர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக மூன்று மாவட்டங்களில் மதுபானம் விநியோகம் தடைபட்டுள்ளதால் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உண்டாக்கியுள்ளது.
English Summary
Tasmac liquor distribution stopped due to truck owners protest