தமிழகத்தின் முதல் பெண் காவலர் சிசிலி மறைவு; காவல் துறையினரும், பொதுமக்களும் அஞ்சலி..!
Tamil Nadus First Female Police Officer Cecily Passes Away
தமிழக காவல்துறை வரலாற்றில் முதல் பெண் காவலரான சிசிலி, உடல் நலக்குறைவு காரணமாக தனது 82-வது வயதில் சென்னையில் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு சென்னை பாலவாக்கத்தில் உள்ள இல்லத்தில், காவல் துறையினரும், பொதுமக்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கடந்த 1973-ஆம் ஆண்டு தமிழக காவல்துறையில் சேர்ந்த முதல் பெண் காவலர் என்ற பெருமையைப் பெற்றவர் சிசிலி. தனது திறமையாலும், அர்ப்பணிப்புடன் கூடிய பணியினாலும் அடுத்தடுத்து பதவி உயர்வுகளைப் பெற்றவர். தொடர்ந்து 1977-ஆம் ஆண்டு தமிழகத்தின் இரண்டாவது பெண் உதவி ஆய்வாளராக பதவி உயர்வு பெற்ற பெருமைக்கு சொந்தக்காரர்.
சிசிலி தனது பணிக்காலத்தில் சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், குற்றங்களைத் தடுப்பதிலும் மிகச் சிறந்த பங்களிப்பை வழங்கியுள்ளார். இதற்காக பல்வேறு பதக்கங்களையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார். குறிப்பாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் இருந்து உயரிய விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.
தனி பணிக்காலத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் சிறப்பாகப் பணியாற்றிய சிசிலி இறுதியாக சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு பிரிவின் ஆய்வாளராக பணியாற்றிய நிலையில், கடந்த 2005-ஆம் ஆண்டு தனது பணியில் இருந்து ஓய்வு பெற்றார். இவரது கணவர் சூசை மாணிக்கமும் காவல் துறையில் ஆய்வாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். மறைந்த சிசிலிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
English Summary
Tamil Nadus First Female Police Officer Cecily Passes Away