அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்களுக்கு புதிய கார் வாங்க உச்சவரம்பு நிர்ணயம்...! - தமிழக அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு
Tamil Nadu government issues order to cap new car purchases ministers MLAs
தமிழகத்தில் சபாநாயகர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கார் தொகைக்கு உச்சவரம்பு நிர்ணயித்து மாநில அரசு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இதன்படி, அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களுக்கு ரூ.26 லட்சம் வரையிலும், மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ரூ.15 லட்சம் வரையிலும் கார் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாகப் பொதுத்துறை செயலாளர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"தமிழ்நாடு சம்பளம் வழங்கும் சட்டத்தின் கீழ், சட்டமன்ற உறுப்பினர்களுக்கான பயணப்படி விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக, ஏற்கெனவே நடைமுறையில் உள்ள விதிகளில் 'வாகன வசதி' என்ற புதிய சொல் சேர்க்கப்பட்டு, அது மோட்டார் காரைக் குறிக்கும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ளது.புதிய உத்தரவின்படி, அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோருக்குக் கார் வாங்குவதற்கான அதிகபட்ச தொகை ரூ.26 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மற்ற அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் கார் வாங்குவதற்கான உச்சவரம்பு ரூ.15 லட்சமாக இருக்கும். இந்தத் தொகையில் காரின் அடிப்படை விலை, வரிகள், பதிவு கட்டணம் மற்றும் வாகனக் காப்பீடு ஆகிய செலவுகளும் அடங்கும்.மேலும், கார் வாங்குவதற்கான இந்த உச்சவரம்புத் தொகை ஆண்டுதோறும் 5 சதவீதம் உயர்த்தப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்காக வாங்கப்படும் கார்கள் அரசின் பெயரிலும், மற்றவர்களுக்கான கார்கள் சட்டமன்றச் செயலகச் செயலாளரின் பெயரிலும் கொள்முதல் செய்யப்படும். அனைத்து வாகனங்களும் பி.எஸ்.-6 மாசுக் கட்டுப்பாட்டுத் தரநிலைகளைப் பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும். மேலும், அரசின் கொள்முதல் இணையதளம் வாயிலாகவே கார்கள் வாங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
அமைச்சர்களுக்கான கார் தொடர்பான செலவுகளைப் பொதுத்துறை ஏற்கும். சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோருக்கான செலவுகளைச் சட்டமன்றச் செயலகம் மேற்கொள்ளும். மற்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கான செலவுகள் மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக வழங்கப்படும்.கார்களின் பராமரிப்பு, பழுதுபார்ப்பு, எரிபொருள் மற்றும் ஓட்டுநர் ஊதியம் உள்ளிட்ட செலவுகளையும் யார் ஏற்க வேண்டும் என்பது குறித்து அரசு தெளிவான வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமைச்சர்களுக்கான இத்தகைய செலவுகளைப் பொதுத்துறை ஏற்கும். சபாநாயகர், துணை சபாநாயகர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் அரசு தலைமை கொறடா ஆகியோருக்கான செலவுகளைச் சட்டமன்றச் செயலகம் ஏற்கும். மற்ற சட்டமன்ற உறுப்பினர்களின் வாகனப் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகள் அவர்களுக்கு வழங்கப்படும் வாகனப்படித் தொகையின் வாயிலாக மேற்கொள்ளப்படும்.
அமைச்சர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்தாலோ, மரணம், பதவி நீக்கம், ராஜினாமா அல்லது தகுதி நீக்கம் போன்ற காரணங்களால் பதவியை இழந்தாலோ, அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கார்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.
அமைச்சர்கள் தங்களது கார்களைப் பொதுத்துறையிடமும், சபாநாயகர் உள்ளிட்டோர் சட்டமன்றச் செயலகச் செயலாளரிடமும், மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடமும் ஒப்படைக்க வேண்டும்.தேவையான சூழல்களில் இந்த விதிமுறைகளில் தளர்வுகளை வழங்கும் அதிகாரம் மாநில அரசுக்கு இருப்பதாகவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Tamil Nadu government issues order to cap new car purchases ministers MLAs