தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்...! தமிழகத்தில் தொடங்குகிறது வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள்..!
All party meeting chaired by Chief Electoral Officer Archana Patnaik Electoral roll special summary correction work begins Tamil Nadu
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலைச் செம்மைப்படுத்தும் சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்துவதற்காக, நாளை தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற உள்ளது. தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்று வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் குறித்து விவாதிக்க உள்ளனர்.தமிழகத்தில் 2027 ஜனவரி 1-ந் தேதியைத் தகுதி நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியலுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக, நவம்பர் 2-ந் தேதி வாக்குச்சாவடிகள் மறுசீரமைக்கப்பட உள்ளன. தொடர்ந்து, நவம்பர் 12-ந் தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் விவரங்களில் திருத்தம் மேற்கொள்ள விரும்புவோர் டிசம்பர் 11-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் டிசம்பர் 28-ந் தேதிக்குள் பரிசீலிக்கப்படும். இதையடுத்து, அடுத்த ஆண்டு ஜனவரி 4-ந் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் அல்லது திருத்தம் செய்வதற்கான விண்ணப்பங்களைப் பொதுமக்கள் அலுவலக வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களின் அலுவலகங்களில் சமர்ப்பிக்கலாம்.
மேலும், வார இறுதி நாட்களில் நடத்தப்படும் சிறப்பு முகாம்களிலும் விண்ணப்பங்களை அளிக்கலாம். புதிதாகப் பெயர் சேர்க்க விரும்புவோர் தங்களது முகவரி மற்றும் வயதுக்கான உரிய சான்றுகளைச் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைச் சுமுகமாகவும் முறையாகவும் மேற்கொள்வது குறித்து ஆலோசிப்பதற்காக, நாளை (வெள்ளிக்கிழமை) நண்பகல் 12 மணிக்குத் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது.
தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க, தமிழக வெற்றிக் கழகம், திமுக, அதிமுக உள்ளிட்ட 7 மாநிலக் கட்சிகளுக்கும், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட 6 தேசியக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு கட்சியின் சார்பிலும் தலா 2 பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளின் நடைமுறைகள், விண்ணப்பங்கள் பெறுதல் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளன.
English Summary
All party meeting chaired by Chief Electoral Officer Archana Patnaik Electoral roll special summary correction work begins Tamil Nadu