கோவையில் கோர விபத்து: ஓட்டுநருக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து...! - ஆட்டோ ஓட்டுநர் உள்பட இருவர் பலி - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டம் பாலத்துறையில் இருந்து உக்கடம் நோக்கி இன்று காலை அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. காலை சுமார் 11 மணியளவில் பாலக்காடு பிரதான சாலையில் இந்த பேருந்து சென்றபோது எதிர்பாராத விதமாக விபத்து நேரிட்டது. சிங்காநல்லூரைச் சேர்ந்த மார்ட்டின் (54) பேருந்தை ஓட்டிச் சென்றார். பரமேஸ்வரன் (46) நடத்துநராகப் பணியாற்றி வந்தார். காலை நேரம் என்பதால் பேருந்தில் 30-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

பாலக்காடு பிரதான சாலையில் குனியமுத்தூரைக் கடந்து சுண்ணாம்புக் காளவாய் பகுதியில் பேருந்து சென்றுகொண்டிருந்தபோது, ஓட்டுநர் மார்ட்டினுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் பேருந்தைத் தொடர்ந்து இயக்க முடியாமல் அவர் தவித்தார். பேருந்து கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாகச் செல்லத் தொடங்கியதால் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஓட்டுநரின் நிலையைப் பார்த்த நடத்துநர் பரமேஸ்வரன் உடனடியாக ஓட்டுநர் இருக்கையை நோக்கி விரைந்து சென்றார். நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த அவர், துரிதமாகச் செயல்பட்டு பேருந்தின் பிரேக்கைப் பிடித்து வாகனத்தை நிறுத்தினார். இருப்பினும், அதற்குள் ஓட்டுநர் மார்ட்டின் இருக்கையிலேயே உயிரிழந்து, ஸ்டீயரிங் மீது சாய்ந்த நிலையில் கிடந்தார்.

இதற்கிடையே, கட்டுப்பாட்டை இழந்து சென்ற அரசு பேருந்து முன்னால் சென்றுகொண்டிருந்த ஓர் ஆட்டோ மீதும், இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மீதும் மோதியது. இதில் ஆட்டோ கவிழ்ந்ததுடன், அதன் மீது பேருந்து ஏறி இறங்கியது. இந்தக் கோர விபத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விசாரணையில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் குனியமுத்தூரைச் சேர்ந்த நூர்மு கம்மது (51) என்பது தெரியவந்தது. மேலும், மோட்டார் சைக்கிளில் சென்ற சுண்ணாம்புக் காளவாய் பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் (46) என்பவரும் காயமடைந்தார். அவர் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். நெஞ்சுவலி காரணமாக உயிரிழந்த அரசு பேருந்து ஓட்டுநர் மார்ட்டின் மற்றும் விபத்தில் உயிரிழந்த ஆட்டோ ஓட்டுநர் நூர்மு கம்மது ஆகியோரின் உடல்களை மீட்டு, உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்தால் பாலக்காடு பிரதான சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேருந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில், நடத்துநர் பரமேஸ்வரன் துரிதமாகச் செயல்பட்டு வாகனத்தை நிறுத்தியதால், பேருந்தில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டோர் பெரும் ஆபத்திலிருந்து தப்பினர். இருப்பினும், இந்தச் சம்பவத்தில் இருவர் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fatal accident Coimbatore Government bus loses control after driver suffers heart attack Two people including auto driver die


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->