டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு எழுதுவோருக்கு முக்கிய அறிவிப்பு...! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு...!
Important announcement for those appearing TNPSC Group 2 and 2A exams Hall tickets released today
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதல்நிலைத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று (அக்டோபர் 21) வெளியிடப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 1-ந் தேதி நடைபெறவுள்ள இத்தேர்வை எழுதத் தயாராகி வரும் தேர்வர்கள், தங்களுக்கான நுழைவுச் சீட்டைத் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்கள் வாயிலாகப் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தமிழக அரசுத் துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் நோக்கில், குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த ஆகஸ்ட் 11-ந் தேதி வெளியிட்டது.

இதற்கான இணையவழி விண்ணப்பங்கள் செப்டம்பர் 9-ந் தேதி வரை பெறப்பட்டன. பின்னர் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டு மொத்தம் 846 இடங்களாக அறிவிக்கப்பட்டது. இதில் குரூப் 2 பணிகளுக்கு 43 இடங்களும், குரூப் 2ஏ பணிகளுக்கு 803 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.இத்தேர்வு முதல்நிலை மற்றும் முதன்மை என இரண்டு கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. இதன் முதல் கட்டமாக, முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1-ந் தேதி நடைபெறவுள்ளது.
இதற்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியிடப்பட்டுள்ளதால், விண்ணப்பித்த தேர்வர்கள் தங்களது நுழைவுச் சீட்டைத் தவறாமல் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.இதுதொடர்பாகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"அறிவிக்கை எண் 07/2026, நாள் 11.08.2026 மற்றும் பிற்சேர்க்கை எண் 7ஏ/2026, நாள் 03.09.2026 ஆகியவற்றின் வாயிலாக நேரடி நியமனத்திற்காக அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பணிகள்) பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, நவம்பர் 1-ந் தேதி முற்பகலில் நடைபெற உள்ளது.
இத்தேர்வை எழுத அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளங்களான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களது ஒருமுறைப் பதிவு முகப்பின் வாயிலாக மட்டுமே விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும் எனத் தேர்வாணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், ஹால் டிக்கெட்டில் இடம்பெற்றுள்ள வழிமுறைகளைத் தேர்வர்கள் முழுமையாகப் படித்துப் பின்பற்ற வேண்டும். தேர்வரின் விவரங்கள், தேர்வு நடைபெறும் நாள் மற்றும் நேரம், தேர்வு மையத்தின் பெயர், முகவரி உள்ளிட்ட முக்கியத் தகவல்கள் நுழைவுச் சீட்டில் இடம்பெற்றிருக்கும்.
தேர்வின்போது அனுமதிக்கப்பட்ட பொருட்களைத் தவிர, வேறு எந்தப் பொருட்களையும் தேர்வறைக்குள் எடுத்துச் செல்லக் கூடாது. எனவே, தேர்வர்கள் முன்கூட்டியே ஹால் டிக்கெட்டைப் பதிவிறக்கம் செய்து, அதில் உள்ள விவரங்களைச் சரிபார்த்து, தேர்வுக்குத் தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
English Summary
Important announcement for those appearing TNPSC Group 2 and 2A exams Hall tickets released today