புதுப்பேட்டை 2 படத்துக்கு மீண்டும் வேலை பார்க்கும் செல்வராகவன்? தனுஷ் ரசிகர்களுக்கு வந்த சர்ப்ரைஸ் அப்டேட்!
Is Selvaraghavan working on Pudhupettai 2 again A surprise update for Dhanush fans
தனுஷ் மற்றும் இயக்குநர் செல்வராகவன் ஆகிய இருவரின் திரைப்பயணத்திலும் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய திரைப்படம் புதுப்பேட்டை. இப்படத்தில் கொக்கி குமார் என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் வெளிப்படுத்திய அசாத்தியமான நடிப்பு இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தனுஷ் நடிப்பில் இதுவரை ஏராளமான திரைப்படங்கள் வெளியாகியிருந்தாலும், ரசிகர்களின் விருப்பமான படங்களின் பட்டியலில் புதுப்பேட்டைக்கு எப்போதும் தனி இடம் உண்டு.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் தனுஷின் நடிப்பு ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்திருக்கும். குறிப்பாக, திரையுலகில் அறிமுகமாகி சில ஆண்டுகளிலேயே இவ்வளவு அழுத்தமான கதாபாத்திரத்தில் அவர் நடித்தது அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல்லாக அமைந்தது. அதேபோல், செல்வராகவனின் இயக்கத் திறனை வெளிப்படுத்திய முக்கியமான படைப்புகளில் ஒன்றாகவும் புதுப்பேட்டை பார்க்கப்படுகிறது. இப்படத்தின் இரண்டாம் பாகம் எப்போது உருவாகும் என்பதுதான் ரசிகர்களின் நீண்டகால எதிர்பார்ப்பாக இருந்து வருகிறது.
புதுப்பேட்டை 2 திரைப்படம் உருவாகும் என்று செல்வராகவன் ஏற்கெனவே பலமுறை தெரிவித்திருப்பதால், அவர் சமூக வலைதளங்களில் ஏதேனும் பதிவு வெளியிட்டாலே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துவிடும். குறிப்பாக, புதுப்பேட்டை 2 எப்போது தொடங்கும், தனுஷ் மீண்டும் கொக்கி குமாராக நடிப்பாரா என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
இந்த நிலையில், செல்வராகவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள புதிய பதிவு ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுப்பேட்டை படத்தின் கதையை மீண்டும் திருத்தி எழுதும் பணியில் ஈடுபட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், புதுப்பேட்டை 2 திரைப்படத்துக்கான கதை உருவாக்கப் பணிகள் மீண்டும் நடைபெறுகிறதா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
முதல் பாகத்தில் கொக்கி குமாரின் வாழ்க்கை எந்த இடத்தில் முடிவடைந்ததோ, அங்கிருந்து கதையைத் தொடர்ந்து இரண்டாம் பாகம் உருவாகுமா அல்லது புதிய திருப்பங்களுடன் கதை அமைக்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. இருப்பினும், செல்வராகவனின் தற்போதைய பதிவு மட்டும் புதுப்பேட்டை 2 படத்தின் தயாரிப்பு தொடங்கிவிட்டதை உறுதிப்படுத்தவில்லை. படத்தின் கதைக்களம், நடிகர்கள் மற்றும் படப்பிடிப்பு தொடங்கும் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில், ரசிகர்கள் அடுத்தகட்ட அறிவிப்புக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
English Summary
Is Selvaraghavan working on Pudhupettai 2 again A surprise update for Dhanush fans