தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் பெயரில் விர்ச்சுவல் அப்யூசர்ஸை உருவாக்குவதா? முதல்வர் விஜய்க்கு சென்னை மேயர் பிரியா கேள்வி! - Seithipunal
Seithipunal


தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் என்ற பெயரில் விர்ச்சுவல் அப்யூசர்ஸை உருவாக்குவது நியாயமா என்று முதல்வர் விஜய்க்கு சென்னை மேயர் பிரியா கேள்வி எழுப்பியுள்ளார். சமூக வலைதளங்களில் தன்னைப் பற்றி ஆபாசமாகவும், இழிவாகவும் கருத்துகளைப் பதிவிட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அவர் புகார் அளித்துள்ளார். ஏற்கெனவே பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக மேயர் பிரியா அளித்துள்ள புகாரில், “நான் பொது வாழ்வில் இருக்கிறேன் என்ற ஒரே காரணத்திற்காக என்னைப் பற்றி ஆபாசமாகப் பேசுவதும், தொடர்ந்து இழிவுபடுத்துவதும்தான் தவெக அரசின் கொள்கையா? பெண்கள் பொது வாழ்க்கையில் ஈடுபடக் கூடாதா? முதலமைச்சர் அவர்களே, தவெக விர்ச்சுவல் வாரியர்ஸ் என்று சொல்லிக்கொண்டு விர்ச்சுவல் அப்யூசர்ஸை உருவாக்குவது நியாயமா? என்மீது தொடுக்கப்பட்ட அத்தனை ஆபாசமான, கேலியான மற்றும் இழிவான செயல்கள் தொடர்பாகத் தலைமை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “கொள்கை ரீதியாக எதிர்கொள்ளாமல், பெண்களை ஆபாசமாகச் சித்தரிப்பது எந்த வகையில் நியாயம்? தவெகவைச் சேர்ந்த பெண்களுக்கு மட்டும்தான் மாண்பு உள்ளதா? மற்ற பெண்களுக்கு மாண்பு இருக்கக் கூடாது என்பதுதான் தவெக அரசின் நிலைப்பாடா?” என்றும் அவர் தனது புகாரில் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அனுப்பிய புகார் கடிதத்தையும் அவர் வெளியிட்டுள்ளார்.

அண்மையில், தமிழ்நாட்டில் பெண்களைத் தவறாகப் பேசினால் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் விஜய் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த பெண்களைக் குறிவைத்து சமூக வலைதளங்களில் தவெகவினர் எனக் கூறப்படுபவர்கள் தொடர்ந்து அவதூறான கருத்துகளைப் பதிவிடுவதாகவும், அச்சுறுத்தல் விடுப்பதாகவும் திமுக தரப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக திமுகவினர் பல்வேறு புகார்களை அளித்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற விமர்சனமும் காவல்துறை மீது எழுந்துள்ளது. இந்தச் சூழலில், சென்னை மேயர் பிரியா அளித்துள்ள புகார் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்குமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Creating virtual abusers under the guise of TVK Virtual Warriors Chennai Mayor Priya questions Chief Minister Vijay


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



Seithipunal
--> -->