சென்னையில் அதிர்ச்சி மோசடி...! குறைந்த வட்டியில் பல கோடி கடன் தருவதாகக் கூறி ரூ.100 கோடி சுருட்டிய 3 பேர் கைது...!
Shocking fraud in Chennai 3 people arrested for swindling 100 crores by claiming to provide loans of several crores at low interest rates
குறைந்த வட்டியில் பல கோடி ரூபாய் கடன் வாங்கித் தருவதாகக் கூறி, பலரிடம் சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக எழுந்த புகாரில் 3 பேரை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள் கைது செய்துள்ளனர். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மூலம் கடன் ஏற்பாடு செய்து தருவதாக நம்பவைத்து, கமிஷன் என்ற பெயரில் கோடிக்கணக்கில் பணம் வசூலித்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த தொழிலதிபர் மணிவண்ணன், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்களிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில், வில்லிவாக்கத்தைச் சேர்ந்த லயன் முத்துவேல் என்பவர் தனக்கு அறிமுகமானவர் என்றும், தொழிலை விரிவுபடுத்துவதற்குப் பெருந்தொகை தேவைப்பட்டதால் அவரிடம் உதவி கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

அப்போது, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பலரைத் தனக்குத் தெரியும் என்றும், அவர்களின் மூலம் குறைந்த வட்டியில் ரூ.50 கோடி கடன் பெற்றுத் தருவதாகவும் லயன் முத்துவேல் உறுதியளித்ததாகப் புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதற்காக முன்பணமாகவும் கமிஷனாகவும் ரூ.2 கோடியை அவர் பெற்றுக்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், உறுதியளித்தபடி கடன் தொகையைப் பெற்றுத் தராமலும், வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் லயன் முத்துவேல் ஏமாற்றியதாக மணிவண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். பணத்தைத் திரும்பக் கேட்டபோது மிரட்டல் விடுத்ததாகவும் கூறிய அவர், சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் புகார் அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவலர்கள், விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இதன் தொடர்ச்சியாக, முக்கியக் குற்றவாளியாகக் கூறப்படும் லயன் முத்துவேலை ஆந்திர மாநிலம் ஓங்கோலில் வைத்து காவலர்கள் கைது செய்தனர்.
தொடர்ந்து, லயன் முத்துவேலின் கூட்டாளிகளாகக் கூறப்படும் ஜெகன் மற்றும் திருக்குமரன் ஆகிய இருவரையும் காவலர்கள் கைது செய்தனர். இவர்கள் மூவரும் குறைந்த வட்டியில் கடன் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் வசூலித்து, மொத்தம் சுமார் ரூ.100 கோடி வரை மோசடியில் ஈடுபட்டதாகத் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இந்த மோசடியில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா, பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர், பணம் எவ்வாறு பரிமாறப்பட்டது என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் காவலர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Shocking fraud in Chennai 3 people arrested for swindling 100 crores by claiming to provide loans of several crores at low interest rates