கோயம்பேடு சந்தையில் வெங்காயம், காய்கறிகள் விலை அதிரடி உயர்வு: இல்லத்தரசிகள் கவலை..!
Steep Hike in Onion and Vegetable Prices at Koyambedu Market Hits Homemakers Hard
சென்னை கோயம்பேடு சந்தைக்கு திருச்சி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் இருந்து பெருமளவில் விற்பனைக்கு வரும் சின்ன வெங்காயத்தின் விலை திடீரென மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளது. போதிய மழையின்மை மற்றும் கடும் வறட்சி காரணமாகப் பயிர் உற்பத்தி கணிசமாகக் குறைந்துள்ளதால் சந்தையில் தீவிரத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வழக்கமாக தினமும் 8 முதல் 9 லாரிகளில் வரக்கூடும் சின்ன வெங்காயம், வரத்து குறைவால் தற்போது வெறும் 2 லாரிகளில் மட்டுமே விற்பனைக்கு வருகிறது. இதன் விளைவாக, கடந்த மாதம் சில்லறை விற்பனையில் கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விற்கப்பட்ட சின்ன வெங்காயம், தற்போது மொத்த விற்பனையில் ரூ.120 வரையிலும், வெளிச்சந்தைக் கடைகளில் கிலோ ரூ.160 வரையிலும் விற்கப்பட்டு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
அதேபோல, பெரிய வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து உயர்ந்த வண்ணமே உள்ளது. பெரிய வெங்காயம் மொத்த விற்பனையில் கிலோ ரூ.60-க்கும், சில்லறை வர்த்தகத்தில் கிலோ ரூ.75 வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதனிடையே, புரட்டாசி மாதம் தொடங்கியுள்ளதால் மக்கள் மத்தியில் காய்கறிகளுக்கான தேவையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் பச்சைக்காய்கறிகளின் விலையும் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, பீன்ஸ் மற்றும் அவரைக்காய் மொத்த விற்பனையில் கிலோ ரூ.80-க்கு விற்கப்பட்டு, வெளிச்சந்தைக் கடைகளில் ரூ.120 வரை விற்பனையாகிறது. ஊட்டி கேரட், பீட்ரூட் மற்றும் முருங்கைக்காய் ஆகியவற்றுக்கு மொத்த விற்பனையில் கிலோ ரூ.40 நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், வெளிச்சந்தையில் கிலோ ரூ.70 வரை விற்கப்படுகிறது. தினசரி சமையலுக்கு இன்றியமையாத சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் மற்றும் அன்றாடக் காய்கறிகளின் விலை இவ்வாறு கட்டுக்கடங்காமல் உயர்ந்து வருவது, குடும்பப் பட்ஜெட்டைப் பாதித்து இல்லத்தரசிகளிடையே பெரும் கவலையையும் சிரமத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Steep Hike in Onion and Vegetable Prices at Koyambedu Market Hits Homemakers Hard