எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா மற்றும் இடைத்தேர்தல் செலவு தொடர்பான வழக்கு: சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு தள்ளிவைப்பு - Seithipunal
Seithipunal


தேர்தலில் வெற்றி பெற்ற குறுகிய காலத்திலேயே அரசியல் காரணங்களுக்காக எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் இடைத்தேர்தலில் போட்டியிடும் நபர்களிடம் இருந்து தேர்தல் செலவை வசூலிக்கத் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிடக் கோரி சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் சுதன் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டிருந்தது.

இம்மனு தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மக்கள் தீர்ப்பைப் புறக்கணித்துத் தேவையின்றிப் பதவியைத் துறப்பவர்களைத் தேர்தல் செலவுக்குப் பொறுப்பேற்கச் செய்ய வேண்டும் என்றும், இதற்குரிய விதிகளை வகுக்கத் தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் சார்பில், "தேர்தல் முடிவுகள் வெளியான பின் தேர்தல் ஆணையத்திற்கு எந்தப் பங்கும் இல்லை; எனவே இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல" எனத் தெரிவிக்கப்பட்டது.

விசாரணையின்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "ராஜினாமா செய்த எம்.எல்.ஏ.க்களிடம் இருந்து தேர்தல் செலவை வசூலிப்பதற்கோ அல்லது அவர்கள் மீண்டும் போட்டியிடுவதைத் தடுப்பதற்கோ எந்தச் சட்டமும் இல்லாத நிலையில், நீதிமன்றம் சட்டத் திருத்தம் கொண்டுவர முடியுமா?" என்று கேள்வி எழுப்பினர். நாடாளுமன்றமே சட்டங்களை இயற்ற முடியும் என்றும், இயற்றப்படும் சட்டங்களின் செல்லுபடியாகும் தன்மையை மட்டுமே நீதிமன்றத்தால் ஆய்வு செய்ய முடியும் என்றும் சுட்டிக்காட்டினர்.

மேலும், மீண்டும் போட்டியிடும் வேட்பாளர்கள் முந்தைய தேர்தலில் செய்த செலவு விவரங்களை வெளியிடுமாறு தேர்தல் ஆணையத்தைக் கேட்கலாமே தவிர, அந்தச் செலவை வேட்பாளர்களிடம் வசூலிக்கவோ, அவர்கள் போட்டியிடத் தடை விதிக்கவோ முடியாது எனக் கூறி, வழக்கின் தீர்ப்பைத் தள்ளிவைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madras High Court Reserves Verdict on Petition Seeking Recovery of By-Election Expenses from Resigned MLAs


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->