CBSE ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும்.. ஓம்சக்தி சேகர் வலியுறுத்தல்!
Special training should be provided to CBSE teachers Omshakti Sekar emphasized
CBSE பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக உரிமை மீட்பு குழு – மாநில செயலாளர் திரு. ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி மாநிலம் தற்போது கல்விக்கேந்திரமாக திகழ்வது மகிழ்ச்சிகரமும் பாராட்டத்தக்கதுமாகும். இந்த வளர்ச்சியில் அரசு பள்ளிகளும் தனியார் பள்ளிகளுக்கு சமமாக சிறந்த கல்வி வழங்க வேண்டும் என்பதே புதுவை தேசிய ஜனநாயக கூட்டணியின் முக்கிய இலக்காகும்.
CBSE தேர்வு முறைக்கு மாறிய புதுவை அரசு பள்ளிகள், இம்முறை முதல் தடவையாக பொதுத் தேர்வுகளை சந்தித்து சிறப்பான தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளன. இது வரவேற்கத்தக்க செய்தியாக இருந்தாலும், சில முக்கியமான திருத்தங்கள் கல்வித்துறையில் அவசியமாகின்றன.
*முக்கிய குறைபாடுகள் மற்றும் பரிந்துரைகள்:*
* கடந்த ஆண்டுகளில் தேர்வு காலங்களில் ஆசிரியர் மாற்றங்கள் தவிர்க்கப்பட்ட நிலையில், இம்முறை தேர்வுகள் நெருங்கும் நேரத்தில் ஆசிரியர்களை மாற்றிய நடவடிக்கை நிர்வாக ரீதியாக மிகப்பெரிய பிழையாகும்.
* CBSE பாடத்திட்டம் மாணவர்கள் நன்கு புரிந்து கற்க வேண்டியதொரு முறையாகும். மாநில பாடத்திட்டத்திலிருந்து திடீரென மாற்றம் செய்யப்பட்டதால் மாணவர்களில் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதைச் சமாளிக்க, அவர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்துவதற்கும், கற்றல் முறையை எளிதாக்குவதற்கும் தனிச் செயல் திட்டங்கள் தேவை.
* CBSE பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் சிறப்பு பயிற்சி அளிக்க கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் முயற்சியில், "ஒவ்வொரு பள்ளிக்கும் ₹2 லட்சம் நிதி" என்ற அறிவிப்பு மாணவர்களிடையே எதிர்பார்ப்பை உருவாக்கியது. ஆனால், மாணவர் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு நிதி வழங்கும் நடைமுறை, மாணவர் குறைவாக உள்ள பள்ளிகளை புறக்கணிக்கிறது. இது கல்வி சமத்துவத்திற்கு எதிராகும்.
* நகர்ப்புறங்களில் கட்டட வசதி மற்றும் ஆசிரியர்கள் போதிய அளவில் இருந்தாலும் மாணவர் சேர்க்கை குறைவாகவே உள்ளது. இது அரசு பள்ளிகளின் மீது நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டியதற்கான அவசியத்தை சுட்டிக்காட்டுகிறது.
*கல்வித் துறைக்கு பரிந்துரைக்கப்படும் நடவடிக்கைகள்:*
1. மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள அரசு பள்ளிகளுக்கு முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்க வேண்டும்.
2. செயல்படாத மற்றும் விதிமுறைகளை மீறும் தனியார் பள்ளிகளை ஆய்வு செய்து, அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும்.
3. அத்தகைய பள்ளிகளின் மாணவர்களை அருகிலுள்ள அரசு பள்ளிகளில் சேர்க்க திட்டமிட வேண்டும்.
4. அரசு பள்ளிகளில் கல்வி பெற்று உயர்ந்து மிக பெரிய அரசு பதவிகளை அடைந்த நபர்களின் விபரங்களை பெற்றோர்களுக்குஎடுத்துச் செல்ல வேண்டும்.
5. 100% தேர்ச்சி வழங்கும் பள்ளிகளை தேர்வு செய்து விருது வழங்குவது போலஅதிக மாணவர்கள் சேர்க்கும் அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகள் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேற்கண்ட பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்தினால், அரசு பள்ளிகளின் தரமும், மாணவர் சேர்க்கையும் நிலைத்த முறையில் உயரக் கூடிய வாய்ப்பு உள்ளது. கல்வியின் நன்மையை அனைவருக்கும் சமமாகக் கொண்டு செல்லும் நோக்கத்தில், அரசும் கல்வித் துறையும் விரைவில் நடவடிக்கை எடுப்பார்கள் என்ற நம்பிக்கையில் கீழ்கண்ட கோரிக்கைகளை தெரிவிக்கிறோம் என அதிமுக உரிமை மீட்பு குழு – மாநில செயலாளர் திரு. ஓம்சக்தி சேகர் வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Special training should be provided to CBSE teachers Omshakti Sekar emphasized