கஞ்சா வைத்திருந்த சினிமா உதவி டைரக்டர்; சென்னையில் அதிர்ச்சி சம்பவம்!
Shocking incident in Chennai Cinema assistant director caught with marijuana
சென்னையில் கஞ்சா வைத்திருந்த சினிமா உதவி டைரக்டர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.இவர்களிடமிருந்து 750 கிராம் உயர்ரக ஓ.ஜி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
சமீபத்தில் நடிகர்கள் ஸ்ரீகாந்த் ,கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது செய்யப்பட்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் புயலை கிளப்பியது.இதையடுத்து நடிகர்கள் ஸ்ரீகாந்த் ,கிருஷ்ணா ஆகியோர் நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தனர்.இந்தநிலையில் சென்னையில் கஞ்சா வைத்திருந்த சினிமா உதவி டைரக்டர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஏழுகிணறு பெரியண்ணா தெருவில் சட்டவிரோதமாக போதைப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக போதைப்பொருள் தடுப்பு தனிப்படை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த 3 வாலிபர்களை பிடித்து சோதனை செய்தபோது அதில் உயர்ரக கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், 3 பேரையும் ஏழுகிணறு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், தண்டையார்பேட்டை வ.உ.சி. நகரைச் சேர்ந்த ஸ்ரீபிரேம்குமார் என்பதும், இவர் சினிமா துறையில் உதவி டைரக்டராக பணிபுரிந்து வருவதும் தெரியவந்தது. மற்ற 2 பேரும் இவரது கூட்டாளிகளான திருவொற்றியூர் விம்கோ நகரைச்சேர்ந்த ராஜன் , சென்னை பிராட்வே பகுதியை சேர்ந்த அலெக்ஸ் சந்தோஷ் என்பதும் தெரியவந்தது.
3 பேரையும் கைது செய்த போலீசார், இவர்களிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 750 கிராம் உயர்ரக ஓ.ஜி. கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கைதான ஸ்ரீபிரேம்குமாரின் நண்பர் மலேசியாவில் இருந்து உயர்ரக கஞ்சாவை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளார். அந்த கஞ்சாவை வாங்கி இவர்கள் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.
மேலும் இது தொடர்பாக இவர்களின் கூட்டாளிகளான அஸ்லாம், அகஸ்டின் ஆகிய மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.
English Summary
Shocking incident in Chennai Cinema assistant director caught with marijuana