ஓடும் ரயில்கள் மீது கல்வீசினால் கடும் தண்டனை...! - ரயில்வே எச்சரிக்கை
Severe Punishment Stone Pelting at Moving Trains Railways Warns
சென்னை ரயில்வே கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் ஓடும் ரயில்கள் மீது கல்வீசும் அசம்பாவிதங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, இத்தகைய சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில், ஓடும் ரயில்கள் மீது கற்கள் எறிவது பயணிகளின் பாதுகாப்பை நேரடியாக பாதிக்கும் மிக ஆபத்தான செயல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தச் செயலால் ரயில்களின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறி, உள்ளே பயணம் செய்பவர்கள் குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோர் கடுமையான காயங்களுக்கு ஆளாகும் அபாயம் அதிகம் உள்ளது.
மேலும், இத்தகைய சம்பவங்கள் பயணிகளிடையே அச்சத்தையும் மனஅழுத்தத்தையும் உருவாக்கி, ரயில் சேவையின் சீரான இயக்கத்திற்கும் தடையாக அமைகின்றன. பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதோடு, ரயில்வே ஊழியர்களின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாக்குகின்றன.
ரயில்வே சட்டம் 1989 படி, ரயில்கள் மீது கல்வீசுவது கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதனைத் தடுக்கும் நோக்கில், தண்டவாளங்களுக்கு அருகில் வசிக்கும் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், இளைஞர்கள் மற்றும் சிறார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, இத்தகைய ஆபத்தான செயல்களில் ஈடுபடாமல் இருக்க அறிவுரை வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தண்டவாளங்கள் அருகே சந்தேகத்துக்கிடமான செயல்பாடுகள் ஏதேனும் தென்பட்டால், பொதுமக்கள் மற்றும் பயணிகள் உடனடியாக ரயில்வே உதவி எண் 139-க்கு தகவல் தெரிவிக்குமாறும் ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
English Summary
Severe Punishment Stone Pelting at Moving Trains Railways Warns