பட்டினிச்சாவை எதிர்கொள்ள இருக்கும் இந்தியா... சீமான் பரபரப்பு எச்சரிக்கை.! - Seithipunal
Seithipunal


நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்,  " நாட்டின் பன்முகத்தன்மையைச் சிதைத்தழித்து, ஒற்றைமயமாக்கலை தீவிரமாகச் செய்து வரும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் சனநாயக விரோதப்போக்கின் செயல்வடிவமாகக் கொண்டு வரப்பட்டிருக்கிற வேளாண்மை தொடர்பான மசோதாக்கள் நாடு முழுமைக்கும் பெருத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. வேளாண்மை மாநிலப்பட்டியலிலுள்ள நிலையில் மாநில அரசுகளின் இசைவோ, கருத்துக்கேட்போ, கலந்தாய்வோ இன்றித் தான்தோன்றித்தனமாக எதேச்சதிகாரப்போக்கோடு வேளாண்மை மசோதாக்கள் இயற்றப்பட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. நாடு கடும் பொருளாதார வீழ்ச்சியுள்ள நிலையில் 23.9 விழுக்காடு நாட்டின் உள்நாட்டு உற்பத்தி சரிந்துள்ளது. தொழிற்துறை, சேவைத்துறை என எல்லாத்துறைகளும் பெரிய வீழ்ச்சியைச் சந்தித்து நிற்கையில், வேளாண் துறை மட்டுமே 3.4 விழுக்காடு பெற்று நேர்மறையாகச் செல்கிறது. அவ்வளர்ச்சியும் அடுத்தக் காலாண்டில் கேள்விக்குறியாகும் எனப் பொருளாதார வல்லுநர்களால் கணிக்கப்படும் நிலையில், வேளாண் துறையைக் கைதூக்கிவிடவும், விவசாயிகளை ஊக்கப்படுத்தி உயர்த்திவிடவுமான செயல்பாடுகளையும், திட்டங்களையும் முடுக்கிவிடாது, கொடுஞ்சட்டத்தின் மூலம் விவசாயத்தை மொத்தமாகச் சந்தையாக்கி, தனிப்பெரு முதலாளிகளின் இலாபவெறி வேட்டைக்கு அதனை இரையாக்க முனைவது இந்தியாவின் இறையாண்மைக்கே ஊறு விளைவிக்கும் பேராபத்தாகும்.

அத்தியவாசியப்பொருட்கள் திருத்த மசோதா, விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் மசோதா, விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா ஆகிய மூன்று மசோதாக்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. இம்மூன்றும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை. பயிர்களை விளைவிப்பது, விளைவித்தவற்றைக் கொள்முதல் செய்வது, கொள்முதல் செய்ததை இருப்பு வைப்பது என வேளாண்மையின் மையக்கண்ணிகளை இந்த மசோதாக்கள் குறிப்பிடுகின்றன. அத்தியாவசியப்பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து உணவு தானியங்கள், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள், வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அத்தியாவசியப்பொருட்கள் பட்டியலிலிருந்து விலக்கம் செய்திருப்பதன் மூலம், அப்பொருட்களைப் பெருமுதலாளிகள் பதுக்கி வைத்துச் செயற்கையாகத் தட்டுப்பாட்டை உருவாக்கி கள்ளச்சந்தையில் விற்பதற்கும், கொள்ளை இலாபம் ஈட்டுவதற்குமே இந்த மசோதாக்கள் வழிவகைச் செய்கிறது. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் மசோதா மூலம் விவசாயிகள் பெருநிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு பருவம் ஆரம்பிக்கும் முன்பு, விலையைத் தீர்மானித்துக் கையெழுத்திட வழிகோலப்பட்டிருக்கிறது. விலையை முன்கூட்டியே தீர்மானிப்பதால் விவசாயிகள் இலாபம் பெறுவார்கள் என்பதெல்லாம் கதைக்கு உதவாதது. அந்த மசோதாவில் விளைபொருட்களின் தரம் பரிசோதனை செய்யப்படும் எனக் குறிப்பிட்டிருப்பதன் மூலம், தரம் குறைவெனக் கூறி விலையை நிறுவனங்கள் குறைக்கும் வாய்ப்பிருப்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

தரத்தைக் காரணமாகக் காட்டி விளைபொருட்களை அடிமாட்டு விலைக்கு வாங்கும் சாத்தியமும் உண்டு. விவசாயிக்கு நிறுவனத்திடமிருந்து வந்துசேர வேண்டிய தொகையில் சிக்கலிருந்தால் அதுகுறித்து அதற்கென்று உள்ள மத்தியஸ்த வாரியத்திடம் முறையிடலாம் என்கிறது இந்த மசோதா. அங்கும் உரிய தீர்வு எட்டப்படாவிட்டால் வட்டாட்சியரை அணுகலாம். அதற்கு அடுத்தபடியாக, மாவட்ட ஆட்சியரை அணுகலாம் எனக் கைகாட்டுகிறது இந்த மசோதா. ஒரு பெருநிறுவனத்தை எதிர்த்து ஏழை விவசாயி சட்டப்போராட்டம் நடத்த முடியும் என்பதும், வட்டாட்சியர், மாவட்ட ஆட்சியர் பெருநிறுவனத்தை எதிர்த்து விவசாயிகளுக்கு நீதிபெற்றுத் தருவார் என்பதைவிடவும் ஏமாற்று ஒன்றுண்டா? இது துளியும் நடைமுறை சாத்தியமற்றது. உலகச்சந்தைக்கு ஏற்றுமதி செய்வதற்கும், இந்தியச் சந்தைக்கு மதிப்புகூட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வதற்குமாகப் பெருநிறுவனங்கள் விவசாயிகளுக்கு அழுத்தம் கொடுக்குமே ஒழிய, இந்நாட்டின் உணவுத்தேவையைப் பூர்த்திசெய்ய ஒருநாளும் துணை நிற்காது.

ஒரு விவசாயி என்ன பயிர் செய்ய வேண்டும் என்பதில் தொடங்கிச் சாகுபடி முறை வரை எல்லாவற்றையும் இனி நிறுவனங்களே தீர்மானிக்கும். இதன்மூலம், விலையைத் தீர்மானிக்கிற உரிமையில்லாத நிலையிலிருந்த விவசாயிகள் இனி எதுவொன்றையும் தீர்மானிக்க இயலாத நிலை உருவாகும். இதன்மூலம், தங்களிடமிருந்த குறைந்தபட்சத் தற்சார்பையும் விவசாயிகள் மொத்தமாய்ப் பறிகொடுக்கிற நிலை ஏற்படும். விவசாயிகள் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா மூலம் இந்தியாவின் எம்மாநிலத்தில் வேண்டுமானாலும் விவசாயிகள் தங்களை விளைபொருட்களை விற்பனை செய்யலாம். எவ்வளவு தானியத்தை வேண்டுமானாலும் மொத்தமாகக் கிடங்கில் சேமித்து வைத்துக்கொள்ளலாம் எனும் நிலை உருவாகியிருக்கிறது. தஞ்சாவூரிலோ, திருவாரூரிலோ உள்ள ஒரு விவசாயி வடமாநிலங்களான உத்திரப்பிரதேசத்திற்கோ, ஜார்க்கன்ட்டுக்கோ, அருகாமையிலுள்ள கேரளத்திற்கோ சென்று வணிகம் செய்வது சாத்தியமில்லை. 2 ஏக்கர் நிலம் மட்டுமே வைத்திருக்கிற சிறு குறு விவசாயிகளே இங்குப் பெரும்பான்மையாக உள்ள நிலையில் தங்களது பகுதியைத்தாண்டி வேறு ஒரு இடத்திற்குச் சென்று மொத்தமாக விற்பனை செய்வது சாத்தியமற்றது. இந்த மசோதா தனிப்பெரும் நிறுவனங்கள் நாடெங்கிலும் பொருட்களைக் கொள்முதல் செய்துகொள்ளவும், அவற்றைக் கிடங்குகளில் சேமித்து வைக்கவும் மட்டுமே துணைசெய்கிறது.

முழுக்க முழுக்கத் தனிப்பெரு முதலாளிகள் தங்கு தடையின்றி விவசாயத்தை வசப்படுத்தவும், அதனைச் சந்தையாக்கி இலாபமீட்டவும் உதவுகின்ற இந்த மசோதாவின் மூலம் உணவுத்தானியங்களை அரசு கொள்முதல் செய்வது கொஞ்சம் கொஞ்சமாகக் குறைக்கப்பட்டு, அது நாளடைவில் பொது விநியோக முறைக்கு உணவுப்பொருட்களை வழங்கலையே முற்றிலும் தடுத்து, அடித்தட்டு மக்களுக்கு மானிய விலையில் உணவுப்பொருட்களை வழங்கிடும் நியாய விலைக்கடைகள் மொத்தமாக மூடப்படும் அபாயம் ஏற்படும். இதன்மூலம், பொருளாதரத்தில் கீழ் நிலையிலுள்ள உழைக்கும் மக்கள் பெருவாரியாகப் பாதிக்கப்பட்டு மீண்டும் இந்நாடு பெரும் பட்டினிச்சாவை எதிர்கொள்ள நேரிடும். உலக வர்த்தகக் கழகத்தின் அழுத்தத்திற்கு அடிபணிந்து 130 கோடி மக்களின் உணவுச்சந்தையைச் சந்தையாக்கி தனிப்பெரு முதலாளிகளின் வசதிக்காய் திறந்துவிடும் கொடுஞ்செயலை தனக்கிருக்கும் பெரும்பான்மையைக் கொண்டு சட்டத்தின் வழியே நிகழ்த்தும் மத்தியில் ஆளும் பாஜக அரசின் இப்படுபாதகச்செயலை வரலாறு ஒருபோதும் மன்னிக்காது. இந்த மசோதாக்களுக்கு ஆதரவளித்துப் பாராளுமன்றத்தில் வாக்குச் செலுத்தியிருக்கும் அதிமுக அரசின் வன்செயல் வாக்குச்செலுத்தி ஆட்சியதிகாரத்தில் ஏற்றி வைத்த மண்ணின் மக்களுக்குச் செய்யப்படும் பச்சைத்துரோகமாகும்.

நாடு முழுமைக்கும் எழுந்துள்ள எதிர்ப்பலைகளையும், வேளாண் பெருங்குடி மக்களின் உள்ளத்து உணர்வுகளையும் அணுவளவும் பொருட்படுத்தாது அதனையெல்லாம் மீறி, இந்த மசோதாக்களைச் செயலாக்க செய்ய மத்தியில் ஆளும் பாஜக அரசு முனையுமென்றால், அரசப்பயங்கரவாதத்திற்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கும் என எச்சரிக்கிறேன் " என்று கூறியுள்ளார்..

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Seeman Angry about Central govt Former Bill Activities


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->