காடுகளுக்குள் நடந்த ரகசிய டீலிங்...? அரிய வகை ஐம்பொன் சிலைகள் கடத்தல் முயற்சி..! - 3 பேர் கைது
Secret dealings jungle Attempt smuggle rare Aimpon idols 3 people arrested
ஈரோடு மாவட்டத்தில் பழமையான ஐம்பொன் சிலைகள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தேகத்துக்கிடமான முறையில் சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்ததில், அரிய வகை ஐம்பொன் சிலைகள் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பர்கூர் மலைப்பகுதிக்குட்பட்ட பாலாற்று பகுதியில் நேற்று 3 பேர் சந்தேகத்துக்கிடமான வகையில் நடந்து சென்றனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த வனத்துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களிடம் சுமார் ஒன்றரை அடி உயரமுடைய 2 ஐம்பொன் சிலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர் அந்த சிலைகளை உடனடியாக பறிமுதல் செய்து, மூவரையும் மேலான விசாரணைக்காக பர்கூர் காவலர்களிடம் ஒப்படைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், அவர்கள் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆனந்தராஜ் (32), தேவராஜ் (23), மற்றும் கேரள மாநிலம் மலப்புரத்தைச் சேர்ந்த ரிச்ஒன் (19) என்பது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து 3 பேரையும் காவலர்கள் கைது செய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ஐம்பொன் சிலைகள் எங்கிருந்து கொண்டு வரப்பட்டன, இதன் பின்னணியில் வேறு யாரேனும் உள்ளனரா என்ற கோணங்களில் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
பழமையான சிலைகள் கடத்தல் தொடர்பான இந்த சம்பவம் ஈரோடு மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Secret dealings jungle Attempt smuggle rare Aimpon idols 3 people arrested