பாகிஸ்தானில் பிரசவத்திற்குப் பின் உறுப்புகள் கடத்தல்...! சர்வதேச ஆன்டி-ஏஜிங் மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு விற்பனை... உலகை உலுக்கும் திடுக்கிடும் தகவல்!
Postpartum organ trafficking Pakistan Sales international anti aging drug companies Shocking information that shake world
பாகிஸ்தானில் மனித உடல் திசுக்களை மையமாகக் கொண்ட அதிர்ச்சி தரும் சர்வதேச கடத்தல் வலையமைப்பு அம்பலமாகியுள்ளது. மகப்பேற்றுக்குப் பிறகு வெளியேற்றப்படும் பிளசன்டாவை சட்டவிரோதமாக சேகரித்து, அதை பதப்படுத்தி முதுமையைத் தாமதப்படுத்தும் ஊசி மருந்துகள் தயாரிப்பதற்காக வெளிநாடுகளுக்கு கடத்தி வந்த கும்பல் பிடிபட்டிருப்பது உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாகிஸ்தான் மத்திய புலனாய்வு அமைப்பு மேற்கொண்ட விசாரணையில், இந்த கும்பல் பல்வேறு மருத்துவமனைகளில் இருந்து மாதந்தோறும் சராசரியாக 200 கிலோ வரை பிளசன்டாவை ரகசியமாக சேகரித்து வந்தது தெரியவந்துள்ளது.கடந்த வாரம் இஸ்லாமாபாத்தில் உள்ள ஒரு வீட்டில் அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சோதனையில், சட்டவிரோதமாக இயங்கி வந்த பிளசன்டா பதப்படுத்தும் மையம் கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கிருந்து சுமார் 500 கிலோ எடையுள்ள மனித திசுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவை பிளசன்டா என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும் கடந்த புதன்கிழமை இஸ்லாமாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து வியட்நாமுக்கு அனுப்பப்பட இருந்த பார்சலில், சுமார் 100 கிலோ மனித திசுக்கள் இருப்பது கண்டறியப்பட்டது.
அவையும் பிளசன்டா என சந்தேகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அந்த பார்சல் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில், இக்கும்பல் இஸ்லாமாபாத் மற்றும் ராவல்பிண்டியில் உள்ள சில மருத்துவமனைகளில் இருந்து ஒரு பிளசன்டாவை வெறும் 800 பாகிஸ்தானி ரூபாய்க்கு வாங்கி வந்தது தெரியவந்துள்ளது.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட பிளசன்டாக்கள் சிறப்பு முறையில் உலர்த்தப்பட்டு, பின்னர் தூளாக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. அங்கு இதனை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் முதுமை தடுப்பு ஊசி மருந்துகள் சர்வதேச சந்தையில் சுமார் 7 லட்சம் பாகிஸ்தானி ரூபாய் வரை விற்பனையாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த சட்டவிரோத வலையமைப்பு இஸ்லாமாபாத்தைத் தாண்டி லாகூர், பெஷாவர், ராவல்பிண்டி உள்ளிட்ட பல முக்கிய நகரங்களிலும் பரவி இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. இதனால் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பிளசன்டா என்பது கர்ப்பகாலத்தில் தாயின் உடலுக்கும் கருவில் வளரும் குழந்தைக்கும் இடையே உயிர் பாலமாக செயல்படும் முக்கிய தற்காலிக உறுப்பு ஆகும். குழந்தைக்கு தேவையான ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்ஸிஜனை வழங்குவதில் இது முக்கிய பங்காற்றுகிறது.
பிரசவம் முடிந்ததும் அதன் செயல்பாடு நிறைவடைகிறது.மருத்துவ ரீதியாக, பிரசவத்திற்குப் பிறகு பிளசன்டா தொற்று பரவ வாய்ப்புள்ள மருத்துவக் கழிவாக கருதப்படுகிறது. அதனால் மருத்துவமனைகள் இதனை பாதுகாப்பான நடைமுறைகளின் கீழ் அழித்து நிர்வகிக்க வேண்டும்.
பிளசன்டாவில் புரதம், இரும்புச்சத்து மற்றும் சில முக்கிய ஊட்டச்சத்துகள் அதிகம் இருப்பதாக நம்பப்படுவதால், சில நாடுகளில் இதனை அடிப்படையாகக் கொண்டு மாத்திரைகள், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஊசி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
ஆனால், பிளசன்டா மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் உடல்திசுக்களை புதுப்பித்து இளமையை நீடிக்கச் செய்கின்றன என்ற கருத்துக்கு இதுவரை உறுதியான அறிவியல் ஆதாரம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Postpartum organ trafficking Pakistan Sales international anti aging drug companies Shocking information that shake world