செந்தில் பாலாஜிக்கு நெருங்கும் பிடி...! த.வெ.க. ஆட்சி கவிழ்ப்பு சதி விவகாரத்தில் நேரில் ஆஜராக சென்னை காவல்துறை உத்தரவு...!
Senthil Balaji getting closer arrest Chennai Police orders him appear person TVK coup plot case
தமிழக அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் வகையில் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க கோடிக்கணக்கில் பேரம் பேசப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் கடும் பரபரப்பை கிளப்பியுள்ளன. இந்த விவகாரம் மாநில அரசியலில் புதிய புயலை உருவாக்கியுள்ளது.தமிழகத்தில் நடைபெற்று வரும் த.வெ.க. ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில், அக்கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி நடந்ததாக அதிர்ச்சி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ஊத்தங்கரை தொகுதி த.வெ.க. எம்.எல்.ஏ. டாக்டர் இளையராஜா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.அந்த புகார் மனுவில், த.வெ.க. அரசை கவிழ்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக தன்னிடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்பட்டதாக அவர் பரபரப்பு குற்றச்சாட்டு முன்வைத்திருந்தார்.

இந்த புகார் அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியது.இதனைத் தொடர்ந்து, டாக்டர் இளையராஜா வழங்கிய தகவல்களின் அடிப்படையில் காவலர்கள் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். விசாரணையின் போது, ஐ.பி.டி.எஸ். தேர்தல் கருத்துக் கணிப்பு நிறுவனத்தின் நிறுவனர் திருநாவுக்கரசு உட்பட மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் என கூறப்படும் சென்னை மேடவாக்கத்தை சேர்ந்த தியாகராஜன், பெசன்ட்நகரை சேர்ந்த நரேஷ், கரூரை சேர்ந்த ரமேஷ், கார்த்தி, சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த செல்வன், மணப்பாக்கத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சீனிவாசன் மற்றும் அஸ்தினாபுரத்தை சேர்ந்த ராஜேஷ் ஆகியோர் அடங்குவர்.அவர்களிடம் காவலர்கள் மேற்கொண்ட தீவிர விசாரணையில், த.வெ.க. ஆட்சியை கவிழ்க்க அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கும் நோக்கில் ரூ.180 கோடி மதிப்பிலான சதித்திட்டம் தீட்டப்பட்டதாக பரபரப்பான வாக்குமூலம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விவகாரத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமார் ஆகியோருக்கு விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.இதன்படி, சென்னை காவலர்கள் இன்று கரூர் மாவட்டம் ராமேஸ்வரபட்டியில் உள்ள செந்தில் பாலாஜியின் பூர்வீக இல்லத்துக்கு நேரில் சென்று சம்மன் வழங்கினர்.
அந்த சம்மனை செந்தில் பாலாஜியின் தந்தை பெற்றுக்கொண்டார்.வரும் திங்கட்கிழமை, ஜூலை 6ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மனில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
English Summary
Senthil Balaji getting closer arrest Chennai Police orders him appear person TVK coup plot case