பள்ளி மாணவன் படுகொலை: வளைத்து பிடித்த காவல்துறை... 6 பேர் கைது...!
School student murder Police cornered and arrested 6 people
சென்னை திருவொற்றியூர் தாங்கல் வசந்த் நகர் பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷின் மகன் தனுஷ் (16). விம்கோ நகரில் உள்ள ஜெயகோபால் கரோடியா அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார்.இந்த நிலையில், நேற்று மாலை சுமார் 4.30 மணியளவில் பள்ளிக்கு அருகே அமைந்துள்ள அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் தனுஷ் பலத்த காயங்களுடன் சடலமாக கிடந்தார். இதனை பார்த்த அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள், மாணவரின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் பாஸ்கரன், திருவொற்றியூர் உதவி ஆணையர் பால்ராஜ், ஆய்வாளர் அலெக்ஸ் உள்ளிட்ட காவலர்கள் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.முதற்கட்ட விசாரணையில், இரண்டு நாட்களுக்கு முன்பு இதே பள்ளியைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவர் ஒருவருக்கும், பிளஸ்-1 மாணவர் ஒருவருக்கும் யார் மூத்தவர் என்பது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த சிறிய தகராறு பின்னர் பகைமையாக மாறியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.இந்த நிலையில், சம்பந்தப்பட்ட பிளஸ்-1 மாணவர், அதே பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோருடன் சேர்ந்து தனுஷை அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் உள்ள காலி மைதானத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு அவரை சரமாரியாக தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலில் படுகாயமடைந்த தனுஷ், சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து திருவொற்றியூர் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவானவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.இந்த கொலை சம்பவம் தொடர்பாக 12 பேரை பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தினர்.
இதில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்டவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவலர்கள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, உயிரிழந்த மாணவர் தனுஷின் உடலை பெற்றுக்கொள்ள அவரது பெற்றோர் தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் மருத்துவமனை மற்றும் காவல் துறை தரப்பில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
English Summary
School student murder Police cornered and arrested 6 people