பாடசாலையா... தண்டனைக்கூடமா...? - மாணவிகளைக் கொடூரமாகத் தாக்கிய ஆசிரியை... பெற்றோர்கள் கொதிப்பால் வழக்குப்பதிவு...! - Seithipunal
Seithipunal


தென்காசி சுரண்டை அருகே உள்ள அரசுப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிகள் 10 பேரை பிரம்பால் கடுமையாக தாக்கியதாக கூறப்படும் 44 வயது ஆசிரியை மீது காவலர்கள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆசிரியையின் தாக்குதலில் மாணவிகளின் கைகளில் காயம் ஏற்பட்டு, அவர்கள் தேர்வெழுத முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.சுரண்டை அருகே உள்ள வி.கே.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை 20-ந்தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது.

அப்போது 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொண்டிருந்த ஆசிரியை தேன்மரியா சுகந்தி, அருகில் உள்ள 10-ம் வகுப்பு அறையில் இருந்து சத்தம் கேட்டதால் ஆத்திரமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதையடுத்து, அந்த வகுப்பறைக்குள் சென்ற ஆசிரியை, அங்கிருந்த மாணவிகளை பிரம்பால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

எதிர்பாராத விதமாக நடைபெற்ற இந்த தாக்குதலில் சுமார் 10 மாணவிகளின் கைகளில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.கைகளில் ஏற்பட்ட காயம் மற்றும் வீக்கம் காரணமாக மாணவிகளுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர்கள் வி.கே.புதூர் அரசு மருத்துவமனை மற்றும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றனர்.

இதில் பவித்ரா என்ற மாணவிக்கு காயம் அதிகமாக இருந்ததால், அவர் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் மூன்று நாட்கள் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

காயங்களால் மாணவிகளின் கைகளில் தொடர்ந்து வீக்கம் மற்றும் வலி இருந்ததால், அவர்களால் பள்ளிக்கு செல்லவும், தேர்வுகளை எழுதவும் முடியாத சூழல் ஏற்பட்டது.இதையடுத்து மாணவி பவித்ராவின் தாயார் ராஜாத்தி, தனது மகளுக்கும் மற்ற மாணவிகளுக்கும் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மாவட்ட கலெக்டரிடம் புகார் அளித்தார்.புகாரை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

மாணவிகளை ஆசிரியை தாக்கிய சம்பவம் குறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட ஆசிரியையின் மீது காவலர்கள் சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொண்டனர்.மாணவிகளுக்கு வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக, பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் 115(2)-வது பிரிவு மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வீரகேரளம்புதூர் காவலர்கள் ஆசிரியை தேன்மரியா சுகந்தி மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மாணவிகள் தாக்கப்பட்டதற்கான முழுமையான காரணம், சம்பவத்தின் பின்னணி மற்றும் இதுதொடர்பான பிற விவரங்கள் குறித்து காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவிகள் பிரம்பால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

School or prison Teacher brutally assaults female student Parents file case due to anger


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->