தூத்துக்குடியில் கைதான இளைஞர் திடீர் மரணம்: போலீஸார் தாக்குதலில் இறந்ததாக உறவினர்கள் போராட்டம்..!
Relatives protest after youth arrested in Thoothukudi dies in police attack
தூத்துக்குடியில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக அருணாச்சலம் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டு இருந்த நிலையில், இன்று (ஜூலை 23) உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞர் காவல் துறையினர் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் திமுக முன்னாள் அமைச்சர் கீதாஜீவனும் பங்கேற்றார்.
தூத்துக்குடி அமுதா நகரை சேர்ந்த நாகராஜின் மகன் அருணாச்சலம் (24). இவர், தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி தூத்துக்குடி 03-ஆம் மைல் பகுதியில் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை விற்பனை செய்ததாக அருணாச்சலத்தை தூத்துக்குடி தென்பாகம் போலீஸார் கைது செய்தனர். அப்போது அவரிடம் இருந்து 120 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதைத் தொடர்ந்து அவரை தென்பாகம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் காவல் நிலைய லாக்-அப்பில் இருந்தபோது அவர் திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து, அவரை காவல் நிலைய ஜாமீனில் போலீஸார் விடுவித்ததோடு, அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பேரில் அவரது குடும்பத்தினர் வந்து அவரை அழைத்து சென்று, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அருணாச்சலம் இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவரது உடலை உடனடியாக பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறை அருகே திரண்டனர். அத்துடன், காவல் துறையினர் தாக்கியதில் தான் அருணாச்சலம் இறந்துள்ளார் என்றும், இதில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும். மருத்துவக் கல்லூரியில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு சென்ற சடலத்தை உடனே மருத்துவமனைக்கு திரும்ப கொண்டுவர வேண்டும்என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாக திமுக முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான பி.கீதாஜீவன் தலைமையில் திமுகவினரும் கலந்துகொண்டனர். குடும்பத்தினருடன் போலீஸார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், உடன்பாடு ஏற்படவில்லை.

இதையடுத்து அவர்கள் மருத்துவமனை வளாகத்தில் இருந்து வெளியே வந்து, தூத்துக்குடி - பாளையங்கோட்டை சாலையில் மருத்துவமனை முன்பு கீதாஜீவன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அருணாச்சலம் உடலை பிரேத பரிசோதனை செய்யாமல் மீண்டும் பிணவறைக்கு கொண்டுவர போலீஸார் சம்மதித்தனர். இதையடுத்து சுமார் 30 நிமிடங்கள் நடைபெற்ற போராட்டத்தை அவர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதன் பின்னர் உறவினர்கள், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து, அருணாச்சலம் மரணம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், அவரது பிரேத பரிசோதனையை முறையாக நடத்த வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட காவல் துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், அருணாச்சலம் மரணத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
இதற்கிடையே, போலீஸார் தன்னை தாக்கியதாக அருணாச்சலம் பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
English Summary
Relatives protest after youth arrested in Thoothukudi dies in police attack