விண்ணை முட்டும் தங்கம் விலை!
price of gold jewellery in Chennai
சென்னையில் தங்க விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது. செவ்வாய்க்கிழமை காலை ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.97,440, ஒரு கிராம் ரூ.12,180 என விற்பனையாகிறது.
கடந்த சில வாரங்களாக சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இடைவிடாமல் உயர்ந்து வருகிறது. இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் தெளிவாகக் காணப்படுகிறது. நிபுணர்கள் கணிப்பின்படி, தற்போதைய போக்கில் தங்கம் விரைவில் சவரன் ரூ.1 லட்சத்தைத் தொடும் வாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.
கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் சவரனுக்கு ரூ.5,600 உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியது. வெள்ளிக்கிழமை தங்கம் சவரனுக்கு ரூ.97,600 என விற்பனையானது. வார இறுதியில், சனிக்கிழமை ரூ.1,600 குறைந்ததுடன், தீபாவளி நாளான திங்களன்று மேலும் ரூ.640 குறைந்திருந்தது. ஆனால் செவ்வாய்க்கிழமை காலை மீண்டும் அதிரடியாக விலை ஏற்றம் பதிவாகி, தங்கம் மீண்டும் உச்ச நிலையை எட்டியுள்ளது.
சர்வதேச அளவில் டாலர் மதிப்பு, அமெரிக்க பொருளாதாரக் கொள்கைகள், மத்திய வங்கிகளின் தங்க கையிருப்பு அதிகரிப்பு, பங்குச்சந்தை சலசலப்பு போன்றவை தங்க விலை உயர்வுக்கு காரணமாகக் கூறப்படுகிறது.
இதனிடையே, வெள்ளி விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஒரு கிராம் ரூ.2 குறைந்து ரூ.188 ஆகவும், ஒரு கிலோ ரூ.1,88,000 ஆகவும் விற்பனையாகிறது.
தங்கத்தின் தொடர்ச்சியான விலை ஏற்றம் நகை விற்பனையாளர்களுக்கு உற்சாகமாக இருந்தாலும், திருமணம் மற்றும் பண்டிகைக்காலத்தில் வாங்கும் நுகர்வோர்கள் சற்றே சிரமத்தில் உள்ளனர்.
English Summary
price of gold jewellery in Chennai