தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள்..அமைச்சர் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில்,  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்கள் தலைமையில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக துறை அலுவலர்களுடன்  ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், கண்காணிப்பு அலுவலர் / துணிநூல் துறை இயக்குநர்  லலிதா  அவர்கள்மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  லட்சுமி பவ்யா தண்ணீரு அவர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்ததாவது
தென்மேற்கு பருவமழையையொட்டி, நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கூடலூர், பந்தலூர், உதகை, குந்தா உள்ளிட்ட இடங்களிலுள்ள அபாயகரமான பகுதிகளை அலுவலர்கள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இரவு நேரங்களிலும் கண்காணிப்பு பணிகளை அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டும். மழை பொழிவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் உடனடியாக பொதுமக்களை அருகிலுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து, அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்க வேண்டும். மாவட்டத்திலுள்ள அணைகளின் நீர் இருப்பினை கண்காணிக்க வேண்டும். 

பேரிடர் இடர்பாடுகள் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பருவமழை பாதிப்புகளை சீர் செய்யும் வகையில் ஜே.சி.பி வாகனங்கள் மற்றும் மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். வரும் நாட்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்து துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. 

நாளை மற்றும் நாளை மறுநாள் அதிகனமழை பெய்ய இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், அனைத்துத்துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் கட்டணமில்லா தொலைபேசி 1077 மற்றும் 0423 2450034 மற்றும் 2450035 ஆகிய எண்களிலும், 94887 00588 வாட்ஸ் அப் எண்ணிலும் தெரிவிக்கலாம். மாவட்டத்தில், 283 இடங்கள் அபாயகரமான பகுதிகளாக கண்டறியப்பட்டு, அதனை கண்காணிக்க அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய 42 மண்டல குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து வட்டங்களுக்கும் துணை ஆட்சியர் நிலையிலான கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் 456 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் 3,500 முதல்நிலை பொறுப்பாளர்கள் மற்றும் 197 பேரிடர் கால நண்பர்கள் தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளனர். 

தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையினர் 80 நபர்கள் வரவழைக்கப்பட்டு, குந்தா தாலுக்கா மற்றும் கூடலூர் தாலுக்காவிற்கு தலா 25 நபர்களும், உதகை தாலுக்காவிற்கு மீதமுள்ள 30 நபர்களும் அனுப்பப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். அதேபோல், தேசிய மீட்பு படையினர் 30 நபர்கள் வரவழைக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளனர். அதேபோல், மழை மற்றும் காற்றின் காரணமாக சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தும் வகையில் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ள அனைத்து பகுதிகளையும் தொடர்ந்து கண்காணிக்கவும், தேவைப்படும் பட்சத்தில் அவர்களை பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுவரை மாவட்டத்தில் மழையின் காரணமாக 16 இடங்களில் மரங்கள் விழுந்து, அவை அப்புறப்படுத்தப்பட்டு, போக்குவரத்து சீர் செய்யப்பட்டுள்ளது. மழையின் காரணமாக 3 வீடுகள் பகுதி சேதமடைந்துள்ளது.மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய 
இரண்டு நாட்கள் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களான பால், காய்கறிகளை உள்ளிட்ட பொருட்களை கூடுதலாக வைத்துக் கொண்டால் சிறப்பாக இருக்கும். அதேபோல், மாவட்டத்திலுள்ள சுற்றுலாப் பயணிகள் மாலை 4 மணிக்குள் தாங்கள் தங்கியுள்ள விடுதிகளுக்கு திரும்பி செல்லும் வகையில், திட்டமிட்டு பயணம் செய்தால் பாதுகாப்பாகவும், சிறப்பாகவும் இருக்கும். இதுகுறித்து, மாவட்டத்திலுள்ள சோதனைச் சாவடிகளில் ஒலிபெருக்கி மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளாட்சித்துறை மூலமும் இப்பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பணிகள் நாளை காலை 10 மணி முதல் தொடங்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தொடர்ந்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் சிறப்பாக மேற்கொண்டுள்ளதால், பொதுமக்கள் எவ்வித அச்சமும் அடைய தேவையில்லை என மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  என்.எஸ்.நிஷா  அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக் அவர்கள், மாவட்ட வன அலுவலர் (நீலகிரி வனக்கோட்டம்) கௌதம் , மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Preparatory works for the southwest monsoon Officials consultation under the leadership of the minister


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->