சேலத்தில் கொடூரம்: 7 மாத கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்டு கிணற்றில் வீச்சு – காதலன் அதிரடி கைது!
Pregnant Woman Murdered and Dumped in Well in Salem Partner Arrested
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் ஒன்றியம் கோணசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பேராக்கவுண்டர். இவரது 23 வயது மகள் கோகிலா, கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ஆம் தேதி கோகிலாவுக்குக் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதையடுத்து, பெற்றோர் அவரை அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், கோகிலா 7 மாத கர்ப்பிணியாக இருப்பதை உறுதிசெய்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாகச் சங்ககிரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், அதே பகுதியைச் சேர்ந்த மாரி என்பவரின் மகன் அம்மாசி (26) என்பவரே கோகிலாவின் கர்ப்பத்திற்குக் காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, கோகிலாவை முறைப்படி திருமணம் செய்து கொண்டு வாழும்படி அம்மாசிக்குக் காவல்துறையினர் அறிவுறுத்தினர். தனது ஊரில் கோயில் திருவிழா முடிவடைந்ததும் கோகிலாவைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறிய அம்மாசி, அதுவரை கோகிலா தன் வீட்டில் இருக்கட்டும் எனக் கூறித் தன்னுடன் கன்னியாம்பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில், அம்மாசியின் வீட்டில் தங்கியிருந்த கோகிலா கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி திடீரெனக் காணாமல் போய்விட்டதாக அம்மாசி, கோகிலாவின் குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவித்தார். பல இடங்களில் தேடியும் கோகிலா கிடைக்காததால், பெற்றோர் கொங்கணாபுரம் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்தனர். இதற்கிடையே, வெள்ளாளபுரம் பகுதியில் உள்ள ஒரு விவசாயக் கிணற்றில் இருந்து சாக்கு மூட்டையில் கட்டப்பட்ட நிலையில் கோகிலா பிணமாக மீட்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், கோகிலாவைக் கொடூரமாகக் கொலை செய்து உடலைக் கிணற்றில் வீசியதை அம்மாசி ஒப்புக்கொண்டார். அவர் அளித்த வாக்குமூலத்தில், "கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை வெளியில் சொல்லி எனது பெயரைக் கெடுத்துவிட்டாயே எனக் கேட்டு அன்றைய இரவு கோகிலாவிடம் தகராறில் ஈடுபட்டேன். வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரமடைந்து அவரைத் தாக்கியதால் அவர் மயங்கி விழுந்தார். உடனே அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கிக் கொன்றேன். நள்ளிரவில் உடலைச் சாக்கு மூட்டையில் கட்டி, எனது இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்று கிணற்றில் வீசிவிட்டு, ஒன்றும் தெரியாதது போல் அவரைத் தேடுவது போல நாடகமாடினேன்" எனத் தெரிவித்துள்ளார். இதையடுத்து அம்மாசியைக் கைது செய்த காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Pregnant Woman Murdered and Dumped in Well in Salem Partner Arrested