போப் பிரான்சிஸ் மறைவு.. துணைநிலை ஆளுநர்,முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல்!
Pope Francis passes away Lieutenant Governor, Chief Minister Rangasamy condolences
மனிதருள் புனிதராகத் திகழ்ந்த போப் பிரான்சிஸ் அவர்களது இழப்பு மனித குலத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும் என முதலமைச்சர் ரங்கசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.இதேபோல , புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:உலக கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் அவர்கள் உடல்நலக்குறைவால் வாடிகன் நகரில் காலமானார் என்கிற செய்தி பெரும் துயரத்தை அளிப்பதாக உள்ளது.
உலக கத்தோலிக்க திருச்சபையின் 266வது திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்டு 12 ஆண்டுகளாக இறைப்பணி ஆற்றிய அவர், வாடிகன் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையை ஊக்குவித்ததோடு மட்டுமல்லாமல் கத்தோலிக்க திருச்சபையில் முக்கியமான மாற்றங்களையும் கொண்டு வந்தவர்.
பாரத ரத்னா அன்னை தெரசா உள்ளிட்ட ஐவர்களை புனிதராக அறிவித்த அவர், ஏழைகள், அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக குரல் கொடுத்த மனிதநேயர். எளிமை, அன்பு மற்றும் சமூக நீதிக்காக முக்கியத்துவம் கொடுத்த அவர், எளிய வாழ்க்கை முறைக்காக அனைவராலும் விரும்பப்பட்டவர்.
மனிதருள் புனிதராகத் திகழ்ந்த போப் பிரான்சிஸ் அவர்களது இழப்பு மனித குலத்திற்கு ஈடு செய்ய முடியாத ஒன்றாகும். அவரது இழப்பால் துயருறும் கத்தோலிக்க கிறித்துவ சகோதர சகோதரிகளின் துக்கத்தில் பங்கெடுத்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா எல்லாம் வல்ல ஆண்டவரின் அரவணைப்பில் நித்திய அமைதியைக் காணப் பிரார்த்திக்கிறேன் என முதலமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.
இதேபோல புதுச்சேரிதுணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் கூறியிருப்பதாவது:கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.
போப் பிரான்சிஸ், கடந்த 12 ஆண்டுகளாக கத்தோலிக்க திருச்சபையை வழிநடத்தி வந்தவர். மக்கள் சேவையில் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். உலகில் நடந்து வரும் போர்களுக்கு எதிராக குரல் கொடுத்து உலக சமாதானத்தை விரும்பியவர்.
கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாமல் உலகம் எங்கும் உள்ள மக்களின் அன்பையும் நன்மதிப்பையும் பெற்றவர்.அவரை இழந்து வாடும் அனைவருக்கும் என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என துணைநிலை ஆளுநர் K. கைலாஷ்நாதன் கூறியுள்ளார்.
English Summary
Pope Francis passes away Lieutenant Governor, Chief Minister Rangasamy condolences