முதல் பட சம்பளத்தில் பெண்களுக்காக பள்ளி கட்டும் கும்பமேளா 'வைரல் மங்கை' மோனலிசா!
Kumbh Mela viral manga Monalisa builds a school for girls with her first film salary
2024ஆம் ஆண்டு உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் இணையத்தில் வைரலான முகமாக பிரபலமானவர் மோனாலிசா. அப்போது சாதாரணமாக பாசிகள் விற்றுக் கொண்டிருந்த அவரின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி, ஒரே இரவில் பிரபலமாக மாற்றியது. அதன் பின்னர் சினிமா வாய்ப்புகள் அவரைத் தேடி வந்தன.
இந்நிலையில், அவரை சினிமாவில் அறிமுகப்படுத்த முயன்ற இயக்குநர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டில் சிறைக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் மோனாலிசாவின் திரைப்பயணம் தொடருமா என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால் அந்த சிக்கலைத் தாண்டி, தற்போது அவர் தொடர்ந்து பல மொழிப் படங்களில் கமிட் ஆகி வருகிறார்.
அவரது முதல் படம் ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ இந்தியில் உருவாகிறது. இந்தப் படத்தின் அறிமுக விழாவில் கலந்துகொண்ட மோனாலிசா, மிகவும் உணர்ச்சிபூர்வமாகப் பேசியது கவனம் பெற்றது.
“திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த பிறகு, நான் மீண்டும் பிரயாக்ராஜ் சென்றேன். அங்கு கங்கா தேவிக்கு பூஜை செய்து நன்றி தெரிவித்தேன். கும்பமேளாவில் பாசிகள் விற்றுக் கொண்டிருந்த ஒரு சாதாரண பெண் நான். சினிமாவில் நடிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
மேலும், தனது புகழையும் வருமானத்தையும் சமூக நலனுக்காக பயன்படுத்த விருப்பம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். “என் சொந்த மாநிலமான மத்திய பிரதேசத்தின் கார்கோன் மாவட்டத்தில் பெண்கள் கல்வி மிகவும் பின்தங்கியுள்ளது. அங்கு பள்ளிகளும் குறைவாக உள்ளன. எனவே என் முதல் படத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை வைத்து, என் ஊரில் பெண் குழந்தைகளுக்காக ஒரு பள்ளி தொடங்க திட்டமிட்டுள்ளேன். உண்மையான மாற்றம் கல்வி மூலம் மட்டுமே சாத்தியம்,” என்று கூறினார்.
அவரது இந்த சமூகப்பணித் திட்டம் பலரின் பாராட்டைப் பெற்றுள்ளது.
தற்போது மோனாலிசா இரண்டு தெலுங்கு படங்கள், ஒரு மலையாள படம் மற்றும் ஒரு இந்தி படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். புதிய முகமாக திரைத்துறையில் அடியெடுத்து வைத்துள்ள அவர், எந்த வகை கதாபாத்திரங்களில் தோன்றப் போகிறார் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
English Summary
Kumbh Mela viral manga Monalisa builds a school for girls with her first film salary