ராமர் கோயில் காணிக்கையில் மோசடி; அறக்கட்டளைக்கு பீஹாரின் RJD எம்பி நோட்டீஸ்..!
Bihar MP issues notice to the trust regarding fraud in Ram Temple donations
அயோத்தி ராமர் கோயில் காணிக்கை திருட்டு புகார்களில், ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளையின் செயல்பாடுகள் மீண்டும் ஒருமுறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இப்புகார்கள் மீதான விசாரணைக்கு பிரதமர் நரேந்திர மோடி முதல் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வரை பல்வேறு தரப்பினர் புகார் கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.
இதையடுத்து, உ.பி அரசின் சார்பில், சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து நீதிமன்றங்களின் பல்வேறு தீர்ப்புகளை சுட்டிக்காட்டி பீஹாரின் பன்ஸர் தொகுதி எம்பி சுதாகர் சிங், அறக்கட்டளையினருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

இந்த நோட்டீஸ்-க்கு மூன்று நாட்களில் விளக்கம் கேட்டு அறக்கட்டளையின் தலைவர், பொதுச் செயலாளர் மற்றும் பொருளாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில், கடந்த ஐந்து ஆண்டுகளில் கோயிலின் நன்கொடைகள், தணிக்கை அறிக்கைகள், வங்கிக் கணக்குகள் மற்றும் நிலக் கொள்முதல் குறித்த முழுமையான விவரங்கள் கோரப்பட்டுள்ளன.
இந்த நோட்டீஸ் அனுப்பிய காரணம் குறித்து எதிர்கட்சி எம்பியான சுதாகர் சிங் குறிப்பிட்டுள்ளதாவது; இது, இந்திய அறக்கட்டளைகள் சட்டம் 1882, வருமான வரிச் சட்டம் 1961, உத்தரப் பிரதேச பொது அறக்கட்டளைகள் சட்டம் மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டம் 2002 ஆகியவற்றின் அடிப்படையில் அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இது பொது மத அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் துல்லியமான கணக்குகளைப் பராமரிக்கவும், அது குறித்த அறிக்கைகளை வழங்கவும் வேண்டும் என்ற கடமைகளை இச்சட்டங்கள் விதிக்கின்றன என்றும், பொது மத நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்படும் நன்கொடைகள் அறங்காவலர்களின் தனிப்பட்ட சொத்து அல்ல என்று கூறியுள்ளார்.
மாறாக இவை சமூகத்தின் நலனுக்கானவை என்றும், தணிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மையைக் கோருவதற்குச் சமூகத்திற்கு உரிமை உண்டு எனவும் கூறியுள்ளார்.
ஆனாலும், இந்த நோட்டீஸுக்கு பதிலளிக்கப்படவில்லை எனில் அடுத்த நடவடிக்கை என்ன என்ற குறிப்பிடப்படவில்லை. இந்த நோட்டீஸில், சென்னை உயர் நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பையும் (ஆர். திருமூருகன் எதிர் ஆர்.தென்னரசு மற்றும் பிறர், நவம்பர் 21, 2025) மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
பாபர் மசூதி-ராமர் கோயில் விவாதம் மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடந்த நவம்பர் 19, 2029-இல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, மத்திய அரசு பிப்ரவரி 5, 2020 அன்று ராமர் கோயிலுக்கான அறக்கட்டளையை அமைத்தது.

மொத்தம் 15 உறுப்பினர்களைக் கொண்ட இந்த அறக்கட்டளையில் துறவிகள், நிர்வாக நிபுணர்கள், உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் அரசு நியமனதாரர்கள் இடம்பெற்றுள்ளனர். மஹந்த் நிருத்ய கோபால் தாஸ் அறக்கட்டளையின் தலைவராகவும், சம்பத் ராய் பொதுச் செயலாளராகவும், சுவாமி கோவிந்த்தேவ் கிரி பொருளாளராகவும் உள்ளனர்.
நிருபேந்திர மிஸ்ரா கோயில் கட்டுமானக் குழுவிற்குத் தலைமை தாங்குகிறார். சுவாமி விஸ்வபிரசன்ன தீர்த்தா மத விவகாரங்களுக்கான குழுவின் தலைவராகவும், டாக்டர் அனில் குமார் மிஸ்ரா நிர்வாகப் பணிகளைக் கவனிப்பவராகவும் உள்ளனர்.
இவர்களுடன், சிறப்பு அழைப்பாளராக, கோபால் ராவ் கோயில் நிர்வாகம் மற்றும் தரிசனம் - ஆரத்தி அனுமதிச் சீட்டு முறையைக் கண்காணித்து வருகிறார். எஸைடியின் விசாரணையில், பல்வேறு குழுக்கள் மற்றும் அவற்றின் பொறுப்புகள் குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறது.
English Summary
Bihar MP issues notice to the trust regarding fraud in Ram Temple donations