இரண்டாவது முறையாக மு.க ஸ்டாலின்... பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து..!
political leaders wishes to mk stalin
இன்று சென்னை அமைந்தகரையில் 15-வது திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டிஆர் பாலுவும் போட்டியின்றி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், திமுக தலைவராக 2-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"இரண்டாவது முறையாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ள அருமை நண்பர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். பணி சிறக்கட்டும்" என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, மதிமுக கட்சித் தலைவர் வைகோ வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, "ஜனநாயக முறைப்படி இந்தியாவில் உள்ள மற்ற எல்லா அரசியல் கட்சிகளுக்கும் முன்மாதிரியாகவும், இலக்கணமாகவும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தலைமையேற்று நடத்தி வரும் முதலமைச்சர் ஆருயிர் சகோதரர் மாண்புமிகு தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள், மீண்டும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் வழியில் சின்னஞ் சிறு பிராயம் முதல் திராவிட இயக்கக் கொள்கைகளை வென்றெடுப்பதில் அடக்குமுறைகளைச் சந்தித்து, பல்வேறு பொறுப்புகளிலும் வெற்றிகரமாக இயங்கி, இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் வழிகாட்டும் மாநிலமாக நடத்தி வெற்றி கண்டிருக்கிறார்கள். பிற நாடுகளின் அரசுகளும் திராவிட மாடல் ஆட்சியை பின்பற்றுகிற காலம் வெகு தூரத்தில் இல்லை.
அவர்கள் மென்மேலும் வெற்றிபெற இதயபூர்வமாக வாழ்த்துகிறேன். மேலும் பல்லாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக வழிநடத்திச் செல்ல வேண்டி விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
political leaders wishes to mk stalin