அரசியல் நாடகம் எடுபடாது..'தி.மு.க., பா.ஜ.கவை மீண்டும் விமர்சித்த விஜய்!
Political drama wont workDMKBJP criticized again by Vijay
அரசியலில் கபட நாடகம் போடுவதையே இயல்பாகக் கொண்ட தி.மு.க., இப்போது மத்திய பா.ஜ.க. அரசின் கபட நாடகத்திற்குத் தாள் பணிந்து வணங்கி, தங்கள் மறைமுக உறவினருக்கு விசுவாசத்தைக் காட்டி உள்ளது என்று விஜய் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ் மண்ணுக்கும் தமிழகத்திற்கும் தனிப்பெரும் அடையாளமாக இருக்கும் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு, தமிழையும் தமிழ்நாட்டையும் ஓரவஞ்சனையுடன் ஒதுக்கும் மத்திய பா.ஜ.க. அரசின் பிரதமர் வந்து, ராஜராஜ சோழனுக்கும் ராஜேந்திர சோழனுக்கும் சிலைகள் அமைக்கப்படும் என்று அறிவித்ததோடு சோழர்களின் பெருமை குறித்து நமக்குப் பாடம் எடுப்பது போலவும் பேசிச் சென்றுள்ளார்.
75 ஆண்டுகளைக் கடந்த கட்சி என்றும் தமிழ், தமிழர் அடையாளம் என்றாலே அது தங்களுக்கு மட்டுமே உரியது என்பது போலவும் பொய்யாக மார் தட்டிக்கொள்ளும் தற்போதைய ஆளும் கட்சியான தி.மு.கசோழப் பேரரசர்களுக்கு உரிய மரியாதையை முன்பே முழுமையாக அளித்திருந்தால்,மத்திய பா.ஜ.க. அரசு இதைக் கையில் எடுத்திருக்காது.
சோழப் பேரரசின் பெருமையைக் கொண்டாட வேண்டியது தங்கள் கடமை என்பதை மறந்து, மத்திய பா.ஜ.க. கையில் அடைக்கலம் புகுந்து தமிழகத்தை அடகு வைத்தது போலவே இப்போது தமிழர்களின் பெருமையையும் அடகு வைத்துள்ளது தி.மு.க. அரசு.
ஏற்கெனவே, அரசியலில் கபட நாடகம் போடுவதையே இயல்பாகக் கொண்ட தி.மு.க., இப்போது மத்திய பா.ஜ.க. அரசின் கபட நாடகத்திற்குத் தாள் பணிந்து வணங்கி, தங்கள் மறைமுக உறவினருக்கு விசுவாசத்தைக் காட்டி உள்ளது. எதிர் எதிராக இருப்பது போல காட்டிக்கொண்டே, உள்ளுக்குள் மறைமுகமாக இணைந்து ஓர் அரசியல் நாடகத்தினை அரங்கேற்றும் தி.மு.க.வையும் பா.ஜ.க.வையும் ஓரணியில் கபடதாரிகள் என்றுதானே அழைக்க வேண்டும்?
நாம் இப்படிச் சொல்வது, மறைமுகமாக ஓரணியில் இணைந்து இருக்கும் இவ்விரு கபடதாரிகளுக்கும், மக்களுக்குத் த.வெ.க. உண்மையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறதே என்ற வகையில் எரிச்சல் ஏற்படலாம். அதற்கு என்ன செய்ய? உண்மை ஒருநாள் அம்பலமாகத்தானே செய்யும். அரசியலில் தன் இரண்டாம் ஆண்டில் பயணிக்கும் தமிழக வெற்றிக் கழகமே, தமிழக வரலாற்றுப் பெருமைகளின் மீது பெரும் அக்கறை கொண்ட பேரியக்கம்.ஆனால், பவள விழாக் கண்ட இந்தத் தி.மு.க.வோ, பா.ஜ.க. முதுகிற்குப் பின்னால் பதுங்கிக்கொண்டு பம்முகிறது.
கொள்கை, கோட்பாடுகளுடன் அறிஞர் அண்ணா ஆரம்பித்த இயக்கம் இன்றுதமிழுக்கும் தமிழர்களுக்கும் தமிழ்நாட்டிற்கும் எதிராக உள்ள பா.ஜ.க.விடம் சரணடைந்து கிடப்பதுதான் வேடிக்கை.. இதுதான் தி.மு.க. தலைமைக் குடும்பத்தின் வாடிக்கை.மறைமுகமாக பா.ஜ.க.வும் தி.மு.க.வும் ஓரணியில் இருக்கும் கபடதாரிகளாக இணைந்து நடத்தும் அரசியல் ஆதாய நாடகத்தை இனியும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
English Summary
Political drama wont workDMKBJP criticized again by Vijay