சென்னையில் உதவி கேட்டு 2,242 மூத்த குடிமக்கள் அழைப்பு: காவல் ஆணையர் அருண் அதிரடி உத்தரவு..!
Police Commissioner Arun orders immediate action against 2242 senior citizens who called for help in Chennai
கடந்த ஏழு மாதங்களில் சென்னையில் மட்டும் 2,242 மூத்த குடிமக்கள் உதவி கேட்டு தொடர்பு கொண்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்களுக்கு நேரில் சென்று உடனுக்குடன் நடவடிக்கை வேண்டும் என போலீஸ் ஆணையர் அருண் உத்தரவுப்படி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை சார்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
''சென்னை பெருநகர காவல் எல்லையில் தனியாக வசிக்கும் முதியோர் மற்றும் ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவும் வகையில் போலீஸ் கமிஷனர் அருண் பல அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறார். அந்த வகையில், சென்னை பெருநகர காவல்துறையின் முதியோர் உதவி மையத்தை(1253) தொடர்பு கொண்டு, உதவிகளுக்காக அழைக்கும்போது, உதவி மைய பெண் காவலர்கள் தகவலை பெற்று உடனடியாக சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு வான் தந்தி மூலம் தகவல் தெரிவித்து, ரோந்து வாகனங்கள் மற்றும் ரோந்து காவலர்கள் சம்மந்தப்பட்ட முதியோரிடம் சில நிமிடங்களுக்குள் விரைந்து சென்று அவர்கள் கேட்கும் உதவிகளை உடனுக்குடன் செய்து வருகின்றனர்.

மேலும், அவசர மருத்துவ உதவிகள், திடீர் உடல் நலக்கோளாறுகள் ஏற்படும் முதியோர்களுக்கு ஆம்புலன்ஸ் வாகன உதவி மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகள் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை மாதம் வரையிலான 7 மாதங்களில் மூத்த குடிமக்கள் உதவி மையம் மூலமாக மொத்தம் 2,242 அழைப்புகள் பெறப்பட்டு, அதில் 17 அழைப்புகளுக்கு சட்ட ரீதியாக அந்தந்த காவல் நிலைய ஆய்வாளர்களுக்கு முதியோர் உதவி மையம் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டு புகாரின் தன்மையை பொறுத்து துரிதமாக 24 மணி நேரத்திற்குள் மூத்த குடிமக்களின் புகார்களுக்கு நடவடிக்கை எடுத்து பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள 2,225 அழைப்பாளர்கள் கேட்ட உரிய பொது தகவல்கள் உடனுக்குடன் வழங்கி உதவிகள் செய்யப்பட்டது.
அதேபோல், தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின் பேரில், சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த 2024ம் ஆண்டு முதல் இயங்கி வரும் ‘பந்தம் சேவை திட்டம்’ இயங்கி வருகிறது. பந்தம் சேவை திட்டம் கைப்பேசி எண் 9499957575 மூலம் மூத்த குடிமக்களோ, அவர்கள் உதவி கோரும் நபரோ தொடர்பு கொள்ளும் மூத்த குடிமக்களுக்கு பாதுகாப்பு, மருத்துவம், ஆலோசனைகள், சட்ட உரிமைகள் உட்பட இதர அத்தியாவசிய தேவைகளுக்கு ஒருங்கிணைந்து உதவி செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் வசிக்கும் 75 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோர்கள், வெளிநாடுகளில் வசிக்கும் பிள்ளைகளால் தனித்து வாழும் முதியோர்கள், வாரிசு இல்லாத முதியோர்கள் என தனியாக வசிக்கும் மூத்த குடிமக்களின் அழைப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, பாதுகாப்பு ஏற்பாடுகள், ஆலோசனைகள், சட்ட உதவி மற்றும் இதர அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்து காவல்துறையினர் செயல்படுகின்றனர்.
அந்த வகையில், கடந்த 7 மாதங்களில் ‘பந்தம் உதவி மையம்’ மூலமாக 185 அழைப்புகளுக்கு சட்டரீதியான தீர்வும், 6 அழைப்புகளுக்கு மருத்துவ உதவியும், 5 அழைப்புகளுக்கு பாதுகாப்பு உதவியும், 41 அழைப்புகளுக்கு இதர அத்தியாவசிய உதவியும், 954 அழைப்புகளுக்கு தகவல் மற்றும் வழிகாட்டுதல் உதவியும் கோரப்பட்டால உடனடியாக உதவி செய்யப்பட்டு, மொத்தம் 1,191 அழைப்புகள் பெறப்பட்டு, ஒவ்வொரு அழைப்புகளும் 72 மணி நேரத்திற்க்குள் தீர்வு காணப்பட்டுள்ளது.
இதேபோல மூத்த குடிமக்கள் உதவிகள் அற்ற நிலையில் அழைத்த அழைப்புக்கு சென்னை பெருநகர காவல் துறையில் செயல்பட்டு வரும் காவல் கரங்கள் உதவி மையம் மூலம் நடப்பு 2025ம் ஆண்டில் இதுவரை 646 மூத்த குடிமக்கள் மீட்கப்பட்டு தகுந்த பாதுகாப்பு இல்லங்களில் தங்க வைக்கப்பட்டு 117 மூத்த குடிமக்களின் முகவரிகளை கண்டறிந்து காணாமல் பரிதவித்த அவர்களது குடும்பத்துடன் மீண்டும் காவல் துறையினரால் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர். என்று அத அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
English Summary
Police Commissioner Arun orders immediate action against 2242 senior citizens who called for help in Chennai