#BigBreaking: 20% இட ஒதுக்கீடு.. நாள் குறித்த பாமக.. தொடங்குகிறது போராட்டம்...! - Seithipunal
Seithipunal


20% தனி இட பங்கீடு போராட்டத்தை எவ்வாறு நடத்துவது? எந்த தேதியில் நடத்துவது? என்பது குறித்து விவாதித்து முடிவெடுப்பதற்காக பாட்டாளி மக்கள் கட்சி, வன்னியர் சங்கம் ஆகிய அமைப்புகளில் கூட்டுப் பொதுக்குழு கூட்டம் இணையவழியில் 22 - ஆம் தேதி காலை 11.00 மணிக்கு மருத்துவர் இராமதாஸ், மருத்துவர் அன்புமணி M.P அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 

இந்த விவாதத்தின் முடிவில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 3 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்த தீர்மானங்கள் பின்வருமாறு, " 

தீர்மானம் 1 :

தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு கோரி திசம்பர் 1&ஆம் தேதி முதல் முதற்கட்ட தொடர் போராட்டம்: ஜனவரி மாதத்தில் இரண்டாம் கட்ட அறப்போராட்டம்.

இட ஒதுக்கீட்டின் பயன்கள் அனைத்து இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கும் விகிதாச்சாரப்படி கிடைப்பதை உறுதி செய்வது தான் உண்மையான சமூகநீதியாகும். சமமற்றவர்களை சமமாக கருதுவது உண்மையான சமூகநீதி ஆகாது. ஆனால், தமிழ்நாட்டில் கல்வி, சமூக சூழலில் சமமற்றவர்களை ஒரே தொகுப்பில் வைத்து அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதனால் இட ஒதுக்கீட்டின் பெரும்பகுதியை வலுத்தவர்கள் எடுத்துக் கொள்கிறார்கள்; இளைத்தவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இந்த சமூக அநீதியில் இருந்து வன்னியர்களை மீட்பதற்காகத் தான், அச்சமுதாயத்திற்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி மருத்துவர் அய்யா அவர்கள் 1980-ஆம் ஆண்டிலிருந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு வகையான அறப்போராட்டங்களை நடத்தி வருகிறார். ஆனால், முழுப்பயன் கிடைக்கவில்லை.

1989-ஆம் ஆண்டில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு இரண்டாக பிரிக்கப்பட்டு, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 20% ஒதுக்கீடு வழங்கப்பட்ட போதிலும் வன்னியர் உள்ளிட்ட மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு உரிய சமூகநீதி கிடைக்கவில்லை. தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமுதாயமான வன்னியர்களுக்கு மிகக்குறைந்த பிரதிநிதித்துவம் தான் கிடைக்கிறது. இந்த அநீதிக்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காகத் தான்,‘‘ தமிழ்நாட்டில் மக்கள்தொகை அடிப்படையில்  வழங்கப்படும் 19% தவிர, மீதமுள்ள 81% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமுதாயத்திற்கும் கிடைக்கும் பிரதிநிதித்துவம்  எவ்வளவு? என்பதை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க 3 உறுப்பினர்கள் குழு அமைக்கப்பட வேண்டும். அந்தக் குழு திசம்பர் மாதத்திற்குள் அறிக்கை அளிக்க வேண்டும். கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் 15 விழுக்காட்டுக்கும் குறைவாக இருந்தால் 20% தனி இடஒதுக்கீடு கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்’’ என்று  கடந்த செப்டம்பர் 6&ஆம் தேதி நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில் மருத்துவர் அய்யா அவர்கள் அறிவித்திருந்தார்.

தமிழ்நாட்டின் அமைக்கப்பட்ட முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவரான சட்டநாதன் அவர்கள்,‘‘அரசுத் துறைகளிலும், கல்வி நிறுவனங்களிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒவ்வொரு சமுதாயமும் பெற்ற இடங்கள் எவ்வளவு என்பது குறித்த விபரங்களை ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு அரசுத் துறையிடமிருந்தும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பெற வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் புள்ளிவிவரங்களை 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும்’’ என்று அரசிடம் தாக்கல் செய்த அறிக்கையில் பரிந்துரைத்திருந்தார். அப்பரிந்துரை நிறைவேற்றப்பட்டு இருந்தால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களின் மிகவும் பிற்படுத்தப்பட்ட தன்மை புள்ளி விவரங்களுடன் உறுதி செய்யப்பட்டு வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைத்திருந்திருக்கும்.

சட்டநாதன் ஆணையம் பரிந்துரைத்ததைத் தான் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களும் இப்போது வலியுறுத்தி வருகிறார். ஆனால், இரண்டரை மாதங்களுக்கு மேலாகியும் இந்த நியாயமான கோரிக்கையை பரிசீலிப்பதற்குக் கூட தமிழக அரசு முன்வரவில்லை. மருத்துவர் அய்யா அவர்கள் வலியுறுத்தியவாறு, தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமுதாயத்திற்குமான பிரதிநிதித்துவம் குறித்து ஆய்வு செய்ய இன்று வரை 3 உறுப்பினர்கள் குழு அமைக்கப்படவில்லை. இது வன்னியர் சமுதாயத்திற்கும், சமூகநீதிக்கும் இழைக்கப்படும் மிகப்பெரிய அநீதி ஆகும்.

வன்னிய மக்களுக்கு சமூகநீதி வழங்குவதற்காக தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு வழங்கப்பட்ட 19 விழுக்காடு தவிர, மீதமுள்ள 81% இட ஒதுக்கீட்டில் ஒவ்வொரு சமுதாயத்திற்குமான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை திசம்பர் 31-ஆம் தேதிக்குள் தமிழக அரசு வெளியிட வேண்டும். இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி திசம்பர் 1-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தொடங்கி திசம்பர் 31-ஆம் தேதி வியாழக்கிழமை  வரை அனைத்து பணி நாட்களிலும் சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்துவது என்றும், ஒவ்வொரு நாளும் ஒரு மாவட்டத்தின் பாட்டாளி மக்கள் கட்சியும், வன்னியர் சங்கமும் இணைந்து சென்னையில் இப்போராட்டத்தை நடத்தும் என்றும் இந்தக் கூட்டுப் பொதுக்குழு ஒருமனதாகவும், உணர்வுப்பூர்மாகவும் தீர்மானிக்கிறது.

திசம்பர் 31-ஆம் தேதிக்குள் தமிழக அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சமுதாயத்திற்குமான பிரதிநிதித்துவம் குறித்த விவரங்களை வெளியிட தமிழ்நாடு அரசு தவறும் பட்சத்தில், வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி ஜனவரி மாதத்தின் பிற்பாதியில் தமிழகம் தழுவிய அளவில் மிகப்பெரிய அறப்போராட்டத்தை நடத்துவதென்றும், போராட்ட நாள், வடிவம் ஆகியவற்றை தீர்மானிக்கும் அதிகாரத்தை நிறுவனர் மருத்துவர் அய்யா அவர்களுக்கு வழங்குவது என்றும் பா.ம.க. மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டுப் பொதுக்குழு தீர்மானிக்கிறது.



தீர்மானம் 2 :

வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தை சிறப்பாக நடத்த மாநில மற்றும் மாவட்ட அளவில் போராட்டக் குழுக்கள்!

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு கோரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக வன்னியர் சங்கமும், பாட்டாளி மக்கள் கட்சியும் போராடி வருகின்றன. ஆனால், சமூகநீதியின் தொட்டில் என்று போற்றப்படும் தமிழ்நாட்டில் இந்த நியாயமான கோரிக்கை கூட நிறைவேற்றப்படாதது  மிகவும் வேதனையளிக்கிறது. வன்னியர்களின் தனி இட ஒதுக்கீட்டுக் கோரிக்கைக்காக இப்போது நடத்தப்படும் போராட்டம் தான் கடைசி போராட்டமாக இருக்க வேண்டும்; இந்தப் போராட்டத்தின்போதே  அரசு அழைத்து 20% இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை நிறைவேற்றுவதாக அறிவிக்கும் அளவுக்கு போராட்டம் தீவிரமாக இருக்க வேண்டும் என மருத்துவர் அய்யா அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.

அதற்கேற்ற வகையில் மாநில அளவிலும், மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் அளவிலும் போராட்டக் குழுக்களை அமைக்க  இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது. மாநில அளவிலான போராட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர்களாக....

1.  திரு. ஜி.கே.மணி அவர்கள், தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி
2. திரு. பு.தா. அருள்மொழி அவர்கள், தலைவர், வன்னியர் சங்கம்
3. பேராசிரியர் தீரன் அவர்கள், தலைவர், அரசியல் ஆலோசனைக்குழு, பா.ம.க.
4. பேராசிரியர் கோ.தன்ராஜ் அவர்கள், புதுவை மாநில அமைப்பாளர், பா.ம.க.  
5. திரு. ஏ.கே. மூர்த்தி அவர்கள், இணைப் பொதுச்செயலாளர் (வடக்கு) பா.ம.க.  
6. திரு. இர. அருள் அவர்கள், தலைவர், பாட்டாளி சமூக ஊடகப் பேரவை
7. திரு. ஜி. செல்லப்பா அவர்கள், அமைப்பு செயலாளர், சமூக முன்னேற்ற சங்க ஆகிய 7 பேரையும் பா.ம.க - வன்னியர் சங்கம் கூட்டுப் பொதுக்குழு கூட்ட ஒருமனதாக நியமிக்கிறது.

அதேபோல், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒன்றிய, மாநகர, நகர, பேரூர், கிளை அளவிலும் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகளை ஒருங்கிணைப்பாளர்களாகக் கொண்டு போராட்டக் குழுக்களை அமைக்க இந்த கூட்டுப்  பொதுக்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது. மாநில அளவிலும், மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர, பேரூர் அளவிலும் போராட்டங்களில் பங்கேற்போரின் பட்டியலைத் தயாரிக்கவும் போராட்டக் குழுவினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் கூட்டுப் பொதுக்குழுக் கூட்டம் அன்புடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் 3 : வன்னியர்கள் தனி இட ஒதுக்கீட்டுப் போராட்டத்தின் கோரிக்கை விளக்க பதாகைகளை அனைத்து கிராமங்களிலும் அனுமதி பெற்று அமைக்க வேண்டும்!

வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்து நடத்தப்படவிருக்கும் போராட்டம் குறித்த விழிப்புணர்வை வன்னிய சமுதாய மக்களிடம் ஏற்படுத்துவதும், இந்த போராட்டத்திற்கான கோரிக்கையில் உள்ள நியாயத்தை  மக்களுக்கு விளக்கிப் புரிய வைக்க வேண்டும் என்பதும் பாட்டாளிகளின் அடிப்படைக் கடமையாகும்.

அதற்காக வன்னியர்கள் தனி இட ஒதுக்கீடு போராட்டத்தின் கோரிக்கைகளையும், அதில் உள்ள நியாயங்களையும் விளக்கும் வகையிலான பதாகைகளை தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களில் உரிய அனுமதி பெற்று அமைக்க அந்தந்த பகுதியில் உள்ள போராட்டக் குழுவினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று இப்பொதுக்குழு கோருகிறது " என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PMK Vanniyar Reservation Resolutions 22 November 2020


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->