ஊர்க்காவல் படையினருக்கு மாதம் 30 நாள் வேலை; காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வரும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள், தங்களுக்கு மாதம் 10 நாள்களுக்கு பதிலாக 30 நாள்கள் வேலை வழங்க வேண்டும்; பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பியிருக்கிறார்கள். புதிய அரசின் வாயிலாக தங்களுக்கு நன்மை கிடைக்கும் என்று அவர்கள் நம்பும் வேளையில், அந்த நம்பிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழ்நாட்டில் ஊர்க்காவல் படையினரின் சேவை புறக்கணிக்க முடியாதது; ஆனால், அவர்களின் நலன்கள் மட்டும் பல பத்தாண்டுகளாக புறக்கணிக்கப்பட்டே வருகின்றன. அவர்களின் ஊதியம் தொடர்பாக உச்சநீதிமன்றம் ஆணையிட்டு பத்தாண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், ஆட்சிகள் மாறினாலும் அவர்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பற்ற நிலை மட்டும் மாறவில்லை என்பது தான் வேதனையான உண்மை.

காவல்துறையினருக்கு உதவும் வகையில், தமிழகத்தில் 1963&ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஊர்க்காவல் படையில் பணி செய்பவர்களுக்கு 2011&ஆம் ஆண்டு வரை ஒருநாள் ஊதியமாக ரூ.67 மட்டும் தான் வழங்கப்பட்டு வந்தது. அந்த ஆண்டில் அவர்களுக்கான ஊதியம் ரூ.152 ஆகவும் உயர்த்தப்பட்டது. ஆனாலும், மாத ஊதியம் 2800 ரூபாயைத் தாண்டாமல் அரசு பார்த்துக்கொண்டது. ஊதிய உயர்வு கோரி ஊர்க்காவல் படையினர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவர்களின் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி ஆணையிட்டது. அதன்படியே அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை நாள் ஒன்றுக்கு ரூ.560 ஆக உயர்த்தி 2017&ஆம் ஆண்டில் ஆணையிட்ட அரசு, அவர்களின் பணி நாட்களின் எண்ணிக்கையை ஐந்து நாட்களாக குறைத்துவிட்டது. அதனால், அவர்களின் மாத ஊதியம் ரூ.2800&லிருந்து உயரவில்லை.

மாதத்திற்கு 5 நாள்கள் வேலை போதுமானதல்ல என்றும், பணி நாள்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்றும் ஊர்க்காவல்படையினர் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, 2019&ஆம் ஆண்டில் அவர்களுக்கான பணி நாள்கள் எண்ணிக்கையை 10 ஆக உயர்த்தப்பட்டாலும், பணி நேரம் 4 மணி நேரமாகவும், ஊதியம் ரூ.280 ஆகவும் குறைக்கப்பட்டது. அதனால், பணிநாள்கள் அதிகரித்தாலும் ஊதியம் மட்டும்  உயரவே இல்லை. கூடுதல் நாள்கள் அவர்கள் வேலை செய்தாலும் அதற்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

2021&ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த திமுக, ,‘‘காவல்துறையினருக்கு பல வகையிலும் உறுதுணையாக நிற்கும் ஊர்க்காவல் படையினரின் நலன் காக்கும் நோக்குடன் அவர்களின் பணி நாள்கள் உயர்த்தப்படும்; ஊர்க்காவல் படையினரின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளித்தது. ஆனால், ஐந்தாண்டுகள் ஆட்சி செய்தும் வாக்குறுதியை நிறைவேற்ற எந்த முயற்சியும் செய்யவில்லை.

அதிக நாள்கள் வேலை வழங்கும் விஷயத்தில் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை சுட்டிக்காட்டி  ஊர்க் காவல் படையினர் மீண்டும் உச்சநீதிமன்றத்தை அணுகினார்கள். அந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம், ஊர்க்காவல் படையினருக்கு மாதம் முழுவதும் பணி வழங்க வேண்டும்; மாத ஊதியமாக ரூ.16,800 என்று ஆணையிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த ஆணை ஆந்திரா, ஒதிஷா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படுத்தப்படும் போதிலும், தமிழ்நாட்டில் மட்டும் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி,  ஊர்க்காவல் படையினரின் பணி நாள்களையும், மாத ஊதியத்தையும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று முந்தைய திமுக  ஆட்சியில் தமிழக அரசுக்கு ஊர்க்காவல் படைப்பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர் பரிந்துரைத்திருந்தார். ஆனால், அந்தப் பரிந்துரையையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

பணி நிலைப்பு, ஊதிய உயர்வு தொடர்பாக கடந்த 10 ஆண்டுகளாக ஊர்க்காவல் படையினர் ஏமாற்றப் பட்டு வரும் நிலையில், முதலமைச்சர் விஜய்  அவர்கள் தலைமையில் அமைந்துள்ள புதிய அரசிலாவது தங்களுக்கு  நன்மை கிடைக்கும் என எதிர்பார்க்கின்றனர். அதை நிறைவேற்ற வேண்டியது புதிய அரசின் கடமையும் கூட.

தமிழ்நாட்டில் சட்டம் & ஒழுங்கை பாதுகாப்பதில் கிட்டத்தட்ட காவல்துறையினருக்கு இணையாக ஊர்க்காவல் படையினருக்கும் பங்கு இருக்கிறது. திருவிழாக்கள், போராட்டங்கள், வன்முறைகள் மற்றும் எதிர்பாராத வகையில் ஏற்படும் நெருக்கடியான சூழல்களில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில்  காவல்துறையினருக்கு உதவியாக இருப்பவர்கள் ஊர்க்காவல் படையினர் ஆவர். பெயரளவில் இந்த அமைப்பு காவல்துறைக்கு துணை அமைப்பு என்றாலும், கள அளவில் இவர்கள் காவல்துறைக்கு இணையாகவே செயல்பட்டு வருகின்றனர். காவல்துறையில் அதிகரித்துக்கொண்டே செல்லும் காலியிடங்கள், பெருகி வரும் காவல்பணி தேவைகள் ஆகியவற்றைக்கொண்டு பார்க்கும்போது ஊர்க்காவல் படையின் சேவை ஒவ்வொரு நாளும் தேவை. இது காவல்துறையின் அனைத்து நிலை அதிகாரிகளும் ஒப்புக்கொண்ட உண்மை.

இவை அனைத்திற்கும் மேலாக முதலமைச்சர் விஜய் அவர்கள் தலைமையிலான புதிய அரசு, தமிழகத்தில் போதை ஒழிப்பு, பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றுக்கான புதிய முயற்சிகளைத் தொடங்கியிருக்கும் நிலையில்,  அவற்றுக்கும் ஊர்க்காவல் படையினரின் ஆதரவும், ஒத்துழைப்பும் தேவைப்படும். இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டும், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை நிறைவேற்றும் வகையிலும் ஊர்க்காவல் படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk anbumani ramadoss tvk govt oor kaval padai issue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->