தமிழகத்தில் பின்தங்கிய 15 மாவட்டங்களில் டாஸ்மாக் விற்பனை அதிகம் - அன்புமணி இராமதாஸ் வேதனை!
PMK Anbumani Ramadoss condemn to TASMAC
ராணிப்பேட்டை மாவட்டம் லாலாப்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட திருமண மண்டபம் திறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். நிகழ்வின் போது அவர் கூறியதாவது:
“மே 11-ஆம் தேதி மாமல்லபுரத்தில் பா.ம.க இளைஞர் அணியின் சித்திரை முழுநிலா பெருவிழா மாபெரும் எழுச்சி மாநாட்டாக நடைபெற உள்ளது. இது 12 ஆண்டுகளுக்குப் பின் நடத்தப்படும் மிக முக்கியமான மாநாடாகும். அதில் சகோதர, சகோதரிகள் அனைவரும் வரவேண்டும். இந்த மாநாட்டின் நோக்கம் ‘அனைவருக்கும் சமூக நீதி’ என்பதையே தழுவியது.
பா.ம.க நிறுவனர் மருத்துவர் அய்யா கடந்த 45 ஆண்டுகளாக தமிழகத்தில் சாதிவாரியான கணக்கெடுப்பு நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். இத்தகவலின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்பு, அரசு நலத் திட்டங்கள் போன்றவை சமூகங்களின் தேவைப்படி வழங்கப்பட வேண்டும்.
69% இட ஒதுக்கீட்டை பாதுகாப்பதற்கும், மாநில வளர்ச்சியை சமனாக்குவதற்கும் சாதிவாரியான கணக்கெடுப்பு அவசியம்.
தற்போது உள்ள 38 மாவட்டங்களில் 20 மாவட்டங்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளன. இதில் 15 மாவட்டங்கள் வடதமிழகத்தில் அமைந்துள்ளன. இங்கு கல்வி, சுகாதாரம், தொழில் உள்ளிட்ட துறைகள் பலவீனமடைந்துள்ளன. ஆனால் டாஸ்மாக் விற்பனை மட்டும் அதிகமாகிறது.
இந்த பின்தங்கிய மாவட்டங்களுக்கு தனிச்சிறப்புத் திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தினார்.
English Summary
PMK Anbumani Ramadoss condemn to TASMAC