இந்திக்கு வால் பிடிப்பது தான் திராவிட மாடல் அரசின் கொள்கையா? கொந்தளிக்கும் அன்புமணி இராமதாஸ்!
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin Stop Hindi Imposition
பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில், "சென்னை அசோக்நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் அசோக் நகர் என்ற பெயர் தமிழ், ஆங்கிலம் ஆகியவற்றுடன் இந்தியிலும் எழுதப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக அரசின் இந்த நவீன இந்தித் திணிப்புக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகம் இந்தி எழுத்துகளை மட்டும் வெள்ளைக் காகிதத்தை ஒட்டி மறைத்திருக்கிறது. இந்த நவீன இந்தித் திணிப்பு முயற்சி கண்டிக்கத்தக்கது.
சென்னை மெட்ரோ தொடர்வண்டித் திட்டம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டாலும் கூட, அதன் நிர்வாக அதிகாரம் தமிழக அரசிடம் தான் உள்ளது. தமிழ்நாடு பிரிவு இ.ஆ.ப. அதிகாரி தான் அதன் மேலாண் இயக்குனராக உள்ளார். இத்தகைய சூழலில் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் இந்தி எழுத்துகள் இடம் பெற்றது எப்படி? என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும்.
மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் இந்தி திணிக்கப்பட்டால், அதற்கு எதிராக முழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது அவரது அரசின் இந்தித் திணிப்பைக் கண்டும் காணாமலும் அமைதியாக இருப்பது ஏன்? இரு மொழிக் கொள்கை தான் தங்களின் கொள்கை என்று கூறி வரும் மு.க.ஸ்டாலின் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் மட்டும் மும்மொழிக் கொள்கையை கடைபிடித்தது ஏன்?
அசோக் நகர் மெட்ரோ தொடர்வண்டி நிலையத்தில் நடந்த இந்தித் திணிப்பு முயற்சிக்கு எதிர்ப்பு எழுந்ததன் காரணமாகத் தான் இந்தி எழுத்துகள் காகிதம் ஒட்டி மறைக்கப்பட்டன. இல்லாவிட்டால் மெட்ரோ தொடர்வண்டி நிர்வாகம் முழுவதும் இந்தி திணிக்கப்பட்டிருக்காது என்பதற்க்கு என்ன உத்தரவாதம்?
திமுக அரசின் சொல்லுக்கும் செயலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது. தமிழக மக்கள் மீது தமிழக அரசு நிறுவனம் மூலம் இந்தியை திணிக்க முயன்றதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும். இதற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
English Summary
PMK Anbumani Ramadoss Condemn to DMK Govt MK Stalin Stop Hindi Imposition