அண்ணாமலை வீட்டிற்கே சென்ற பிஎல் சந்தோஷ்.. குமுறிய அண்ணாமலை..1 மணி நேரம் ஆலோசனை! நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் நோக்கில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாஜக பல்வேறு வியூகங்களை தீட்டிக் கொண்டிருக்கிறது. இதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரடியாக தமிழகத்திற்கு வந்து அரசியல் நகர்வுகளை வழிநடத்தி வருகிறார். டிசம்பர் மாதத்திற்குள் தமிழக அரசியலில் பெரிய மாற்றம் நிகழும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், பாஜகவுக்குள் உள்கட்சி பூசல், கூட்டணியில் விரிசல் போன்ற சிக்கல்கள் அதிகரித்து வருவதால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு சவாலாக மாறியுள்ளது. ஓ.பி.எஸ், டி.டி.வி. தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகியது, செங்கோட்டையன் உள்ளிட்ட சில தலைவர்களின் அதிருப்தி குரல் ஆகியவை பாஜக முன்னேற்றத்திற்கு தடையாகக் கருதப்படுகின்றன.

முக்கியமாக, பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது சமீபகாலமாகவே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றன. கட்சியிலிருந்தே சிலர் அவருக்கு எதிராக செயல்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் பரவி வருகிறது. இதனால் அவர் மனஅழுத்தத்துடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை வந்த பாஜக தேசிய அமைப்புப் பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ், நேரடியாக அண்ணாமலையின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்தார். சுமார் ஒரு மணி நேரம் நீடித்த ஆலோசனையின் போது, அண்ணாமலை தன் மனக்குமுறல்களை வெளிப்படுத்தியதாக தகவல் கசிந்துள்ளது.

அவர்,“கட்சிக்காகவே தலைவர் பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்தேன்.எனக்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை.தமிழக நிர்வாகிகளே சிண்டிகேட் போட்டு, என்னை குறிவைத்து பொய் புகார்கள் பரப்புகிறார்கள்”
என்று தன் வேதனையை பகிர்ந்ததாகத் தகவல்.

இதற்கு பதிலளித்த பி.எல். சந்தோஷ், “கவலைப்பட வேண்டாம். தேசிய தலைமைக்கு இதனை எடுத்துச் சென்று விரைவில் தீர்வு காண்கிறேன்” என்று உறுதியளித்துள்ளார்.

இந்த தனிப்பட்ட சந்திப்பிற்குப் பிறகு, பி.எல். சந்தோஷ் மற்றும் அண்ணாமலை இருவரும் இணைந்து சென்னை ஈசிஆர் பகுதியில் நடைபெற்ற பாஜக மையக்குழு கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன், மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சௌந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

ஆச்சரியமாக, உடல்நலக்குறைவால் கூட்டத்தில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்பட்டிருந்த அண்ணாமலை, கடைசி நேரத்தில் கலந்து கொண்டார். மேலும், மாநிலம் தழுவிய பாஜக சுற்றுப்பயணத்திற்கான திட்டத்தை அண்ணாமலையே வகுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றும் முயற்சியில் பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வந்தாலும், உள்கட்சி பூசலும் கூட்டணிக்குள் எழும் அதிருப்தியும் அதற்கு பெரிய சவாலாக உள்ளது. இருப்பினும், பி.எல். சந்தோஷ் – அண்ணாமலை சந்திப்பு, பாஜக உள்நிலை பிரச்சனைகளை சீர்செய்யும் ஒரு முக்கிய முயற்சியாகக் கருதப்படுகிறது. வருகிற நாட்களில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் பிளவுகள் குறைந்து, தேர்தல் யுத்தத்தில் முழு சக்தியுடன் களம் இறங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

PL Santosh went to Annamalai house Annamalai was devastated 1 hour of consultation What happened


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->