நெல் கொள்முதல் தனியாரிடம் ஒப்படைப்பு..தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு! - Seithipunal
Seithipunal


 NCCF    மூலம் நெல்கொள்முதலை கைவிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமே நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு. சாமிநடராஜன் அவர்கள் பத்திரிக்கைகளுக்கு விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு முழுவதும் விவசாயிகள் உற்பத்தி செய்திடும் நெல்லை மாநில அரசு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் அமைத்து கொள்முதல் செய்து ஒன்றிய அரசின் இந்திய உணவுக்கழகத்திற்கு  (FCI)  கொடுத்து வரும் நிலையில், இந்தாண்டு ஒன்றிய அரசு தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் ( NCCF ) மூலம் தான் நெல்கொள்முதல் செய்திட வேண்டுமென மாநில அரசை வலியுறுத்தியதால், மாநில அரசும் இந்தாண்டு டெல்டா மாவட்டங்கள் நீங்கலாக மற்ற மாவட்டங்களில் தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் கொள்முதல் செய்ய அனுமதித்தது. 

ஒன்றிய அரசின் இந்த அமைப்பு என்பது முழுக்க, முழுக்க கூட்டுறவு அமைப்பில்லை. மாறாக, இதில் தனியார் வியாபாரிகள், இடைத்தரகர்கள், வாகன ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்டவர்கள் கூட்டாக சேர்ந்து கொள்முதல் செய்வதாகும். இது படிப்படியாக தனியார் வசம் செல்லும். கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கு விவசாயிகளுக்கு உடன் பணம் கிடைப்பதில் பிரச்சனை ஏற்படும். எனவே, தமிழ்நாட்டில் இதை அனுமதிக்கக் கூடாது என்றும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமே நெல்கொள்முதல் செய்திட வேண்டுமென மாநில அரசை வலியுறுத்தி கடந்த பிப்ரவரி 8ந் தேதி மாநிலம் முழுவதும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் எச்சரித்தைப் போல் தற்போது தேசிய நுகர்வோர் கூட்டுறவு இணையம் ( NCCF ) மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கு 45 நாட்கள் கடந்த பின்பும் விவசாயிகளுக்கு அதற்கான தொகை வழங்கப்படவில்லை. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 23 கிராமங்களில்  NCCF     மூலம் நெல்கொள்முதல் செய்ய அரசு அனுமதித்திருந்தது. இந்த மையங்களில் விவசாயிகள் கொண்டு வந்த நெல்லை ஒரு சில விவசாயிகளிடம் மட்டுமே கொள்முதல் செய்துள்ளனர். மற்ற விவசாயிகளின் நெல்கொள்முதல் செய்யப்படாமல், திறந்தவெளியில் அடுக்கி வைத்து, தற்போது மழையில் நனைத்து விவசாயிகளின் நெல் வீணாகி வருகிறது. கொள்முதல் செய்த நெல்லிற்கும் பணம் வழங்கவில்லை. கொள்முதல் செய்த ஏஜெண்ட்டிடம் கேட்டால் பணம் வந்தால் தருகிறேன் என்கிறார். கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லை கொடுத்துவிட்டு பணம் வராமல் அவதிப்படுகின்றனர். 

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டத்தில் கருநிலம், காட்டூர், கூடலூர், மதுராந்தகம், பெரும், தண்டலம் ஆகிய கிராமங்களில் 19.5.2025 அன்று நேரில் கள ஆய்வு மேற்கொண்டதில், அனைத்து இடங்களிலும் கொள்முதல் செய்த நெல்லுக்கு பணம் வழங்கப்படவில்லை. மேலும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் உட்பட பல மாவட்டங்களில்  NCCF     மூலம் நெல்கொள்முதல் செய்வதில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றது. கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கும் இரண்டு மாதங்கள் கடந்தும் பணம் விவசாயிகளுக்கு வழங்கப்படவில்லை. 

எனவே, உடனடியாக மாநில அரசு தலையிட்டு  NCCF    மூலம் நெல்கொள்முதலை கைவிட்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமே நெல்லை கொள்முதல் செய்திட வேண்டும். இரண்டு மாதங்கள் கடந்தும் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லிற்கு உடன் விவசாயிகளுக்கு பணம் பெற்றுத்தருவதற்கான நடவடிக்கை எடுத்திட வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Paddy procurement handed over to private sector Tamil Nadu Farmers Association opposes


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->