கனமழை எதிரொலி: ஊட்டியில் மரம் விழுந்து சிறுவன் பலி!
Ooty Rain Tree Accident
ஊட்டி அருகே மரம் முறிந்து விழுந்து, கேரளாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன் உயிரிழந்தது பெரும் சோகத்தையும் கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்னதாகவே தொடங்கியுள்ள நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நீலகிரி மாவட்டத்தில் பல சுற்றுலா தலங்கள் பாதுகாப்பு காரணமாக மூடப்பட்டுள்ளன. பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் மாலை 4 மணிக்குள் தங்கும் விடுதிகளுக்கு திரும்பும்படி மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கைகளும் மீட்புப் பணிகளும் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மதியம் பைக்காரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எட்டாவது மைல் பகுதியில் கேரள மாநிலம் முகேரி வடகரையை சேர்ந்த பிரசித் என்பவரின் மகன் ஆதி தேவ் மீது கனமழையுடன் ஏற்பட்ட சூறாவளி காரணமாக மரம் முறிந்து விழுந்தது. படுகாயம் அடைந்த அவரை உடனே ஊட்டி மருத்துவமனைக்கு கொண்டு சென்றாலும், உயிரைக் காப்பாற்ற முடியவில்லை.
காவல்துறையினர் கூறியதாவது: “முன்னதாகவே மரச்செறிந்த பகுதிகளில் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அவசியமில்லாமல் வெளியே செல்லுவதை தவிர்க்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டனர்.