ரேஷன் அரிசி கடத்தலை தடுத்த அதிகாரிகள்... தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்த கும்பல்...!
Officials who prevented smuggling ration rice gang attacked and threatened kill
கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தமிழக-கேரள எல்லை வழியாக மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை கண்டறிந்த உணவு பொருட்கள் தடுப்பு பிரிவு பறக்கும் படை அதிகாரிகள், அந்த வாகனத்தை சினிமா பாணியில் பின்தொடர்ந்து விரட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
களியக்காவிளை வழியாக கேரளாவுக்குள் நுழைந்த மினி லாரி, இஞ்சிவிளை பகுதியில் உள்ள தனியார் அரிசி குடோனுக்குள் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. லாரி குடோனுக்குள் சென்றதும், அங்கிருந்தவர்கள் அவசரமாக கதவை மூடியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் குடோனை நோக்கி சென்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள், அதிகாரிகள் குழுவில் இருந்த வருவாய் ஆய்வாளரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குழுவில் இருந்த பெண் அதிகாரி உள்பட மூன்று பேருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகினர்.
சம்பவம் குறித்து தமிழக பறக்கும் படை அதிகாரிகள் உடனடியாக தமிழ்நாடு மற்றும் கேரள காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதேபோல், கேரள வருவாய் துறை அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்பட்டது.
இதையடுத்து தமிழ்நாடு மற்றும் கேரள காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குடோனை சோதனையிட்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.
இதுதொடர்பாக குடோனை நடத்தி வரும் அலீம் என்பவரிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், தமிழக பறக்கும் படை அதிகாரியை தாக்கி, பெண் அதிகாரி உள்ளிட்ட மூன்று பேருக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியோடிய கடத்தல் கும்பலை பிடிக்க தமிழ்நாடு மற்றும் கேரள காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.
English Summary
Officials who prevented smuggling ration rice gang attacked and threatened kill