இந்தியா - மொரிஷியஸ் இடையே 5 ஆண்டுகளுக்கு எண்ணெய், எரிவாயு ஒப்பந்தம் கையெழுத்து..!
India and Mauritius sign 5 year oil and gas agreement
இந்தியா - மொரிஷியஸ் இடையே எண்ணெய், எரிவாயு துறைகளில், பரஸ்பரம் இருதரப்பு ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியுள்ளது. மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, 2026 ஆகஸ்ட் 20-21 தேதிகளில் மொரிஷியஸ் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டார்.
ஆகஸ்ட் 20 அன்று, அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, மொரிஷியஸ் பிரதமர் டாக்டர் நவின்சந்திர ராம்கூலமுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
அதன்படி, பெட்ரோலியப் பொருட்களின் விநியோகத்திற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் - மொரிஷியஸின் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் இடையே, நீண்ட கால விற்பனை, கொள்முதல் தொடர்பான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், வாகனங்களுக்கான பெட்ரோல், அதிவேக டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றிற்கான அந்நாட்டின் முழுமையான இறக்குமதித் தேவையையும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் பூர்த்தி செய்யும்.
அத்துடன், எண்ணெய், எரிவாயு விநியோக ஒத்துழைப்பு குறித்த இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம், இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால கூட்டு எரிசக்தி செயல்பாடுகளை முறைப்படுத்துகிறது.
மேலும், இது பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம், அந்நாட்டு அதிகாரிகளுக்கான பயிற்சி, திறன் மேம்பாடு, உயிரி எரிபொருள் ஒத்துழைப்பு ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் - மொரிஷியஸின் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகிய இரண்டு நிறுவனங்களுக்கு இடையேயான ஐந்து ஆண்டுகால ஒப்பந்தம், அந்நாட்டிற்கு நீண்ட கால எரிபொருள் விநியோக உத்தரவாதத்தை அளிக்க வகை செய்கிறது.
இது மொரிசியஸ் நாட்டிற்கு எரிசக்திப் பாதுகாப்பை வழங்குவதுடன், எரிபொருள் விலைகளில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அத்துடன், அண்மை ஆண்டுகளில், தெற்காசியாவிற்கு வெளியே, ஒரு இந்திய பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட முதலாவது நீண்டகால விநியோக ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பயணத்தின் போது, மத்திய பெட்ரோலியம், இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, அந்நாட்டு எரிசக்தி, பொதுப் பயன்பாட்டுத் துறை அமைச்சர் பேட்ரிக் ஜெர்வைஸ் அசிர்வாதன், வர்த்தகம், நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜான் மைக்கேல் சூன் சாவ் யங் சிக் யுவென், வெளியுறவு, மண்டல ஒருங்கிணைப்பு, சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் தனஞ்சய் ராம்ஃபுல் ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளார்.
அத்துடன், போர்ட் லூயிஸின் மெர் ரூஜில், இந்தியா ஆயில் (மொரிஷியஸ்) நிறுவனத்தின் 27.5 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கப்பல் எரிபொருள் சேமிப்பு நிலையக் கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பங்கேற்றுள்ளார்.
English Summary
India and Mauritius sign 5 year oil and gas agreement