பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி காலமானார்..! - Seithipunal
Seithipunal


பழம்பெரும் நடிகை செளகார் ஜானகி தனது 94 வது வயதில் காலமானார். வயது மூப்புகாரணமாக  உடல்நல பாதிப்பு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று பிற்பகல் 02 மணியளவில் அளவில் அவரது உயிரிழந்துள்ளார்.

1931 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் பிறந்தவர். தந்தை காகித மில் அதிபர் என்பதால் பல்வேறு இடங்களில் வசிக்க நேர்ந்தது. அந்தவகையில் சென்னையில் அவர் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில் படித்தார். குழந்தைகளுக்கான வானொலி நிகழ்ச்சியில் கலந்துகொண்டதோடு, வானொலி நாடகங்களிலும் பங்கேற்றார். 

இந்த வானொலி நாடகத்தைக் கேட்ட சினிமா தயாரிப்பாளர் பி.என்.ரெட்டி, 'குணசுந்தரி கதா' என்ற தெலுங்கு படத்தில் நடிக்க அழைத்தார். பெற்றோருக்கு இதில் விருப்பம் இல்லாததால், உறவுக்காரப் பையனுக்கு இவரை திருமணம் முடித்து வைத்தனர்.

கணவருடன் விஜயவாடாவில் வசித்து வந்த அவர் வேறு நல்ல வேலை தேடி, சென்னைக்கு வந்தார். அவருக்கு சினிமா ஆசை துளிர்த்ததால் இவரும் சென்னை வந்து, தயாரிப்பாளர் பி.என்.ரெட்டியை சந்தித்தார். அப்போது தன் தம்பி நாகிரெட்டியிடம் அவர் ஜானகியை சிபாரிசு செய்தார்.

பின்னர் விஜயா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் என்.டி.ராமாராவ் நடித்த 'சௌகார்' என்ற தெலுங்கு படத்தில் 19-வது வயதில் கதாநாயகியாக அறிமுகமானார். தோற்றமும், நடிப்பும் இயல்பாக இருந்ததால் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். அதன் பின்னர் அவர் 'செளகார் ஜானகி' என அழைக்கப்பட்டார். 

அடுத்து, மாடர்ன் தியேட்டர்ஸின் 'வளையாபதி' படத்தில் பாரதிதாசன் எழுதிய வசனத்தைப் பேசி நடித்தார். தொடர்ந்து ஜெமினி, ஏவிஎம் என முன்னணி நிறுவனங்களின் படங்களில் வாய்ப்புகள் குவிந்தன. அவரின் அற்புத நடிப்பாற்றல், அபாரமாக வசனம் பேசும் திறன் கொண்ட காரணமாக, 'பாக்கியலட்சுமி','‘படிக்காத மேதை', 'பாலும் பழமும்' என பீம்சிங்கின் பல வெற்றிப் படங்களில் நடித்தார்.

தொடர்ந்து 'பார் மகளே பார்', 'புதிய பறவை', 'நீர்க்குமிழி', 'பாமா விஜயம்', 'எதிர் நீச்சல்', 'இரு கோடுகள்', 'தில்லுமுல்லு' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தார், இவருக்கு சோகக் காட்சியில் நடிக்கும் வாய்ப்பே அதிகம் கிடைத்தாலும், காதல், வீரம், பாசம், கோபம், நகைச்சுவை என அனைத்து பாவங்களையும் சிறப்பாக வெளிப்படுத்தக்கூடியவர்.

தமிழில் எம்ஜிஆர், சிவாஜி, ஜெமினி போன்ற முன்னணி நடிகர்களுடனும், தெலுங்கில் என்.டி.ராமாராவ், நாகேஸ்வர ராவ் என முன்னணி நாயகர்களுடன் நடித்தார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 385-க்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.

எந்த மொழியானாலும் அவரே டப்பிங் பேசும் திறமை கொண்டவர். கே.பாலசந்தரின் நாடகங்களிலும் நடித்தவர். 300-க்கும் மேற்பட்டமுறை மேடையேறியவர். காவியத்தலைவி, ரங்கராட்டினம் ஆகிய 02 படங்களை தயாரித்துள்ளார். தெலுங்கு திரைப்பட விருதுகள் கமிட்டி தலைவராகப் பணிபுரிந்துள்ளார். அத்துடன், சமையல், தோட்டக் கலையில் 'சௌகார்' ஜானகி வல்லவர்.

சென்னையில் 1965-இல் சத்ய சாய்பாபாவை சந்தித்த பிறகு, அவரை தன் குருவாக ஏற்றுக்கொண்டார். அவரால் தான் வாழ்க்கையில் பல அற்புதங்கள் நடந்துள்ளதாக பலமுறை குறிப்பிட்டுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றுள்ளார். இவரது கலை சேவையை பாராட்டும் வகையில் 2022-க்கான பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது. 'சௌகார்' ஜானகியின் மறைவுக்கு தெலுங்கு, தமிழ் திரைத்துறையினர் இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Legendary actress Soukar Janaki passes away


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->