திருப்பூரில் செவிலியர் படுகொலை: மனைவியின் உடலைப் பார்த்து கணவர் தற்கொலை முயற்சி...! - உடன் பணியாற்றியவர் கைது
Nurse murdered Tiruppur Husband attempts suicide after seeing wife body Coworker arrested
திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே காணாமல் போன இளம்பெண், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியபோது மர்மமான முறையில் மாயமான அவரைக் கடத்திச் சென்று கொலை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக அவருடன் பணியாற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, மனைவியின் உடலைப் பார்த்து நிலைகுலைந்த கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கட்டிடத் தொழிலாளி கணவர்; தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிய மனைவி
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள பூங்குளம் பகுதியைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (27). கட்டிடத் தொழிலாளியான இவருக்கும், உறவினர் மகளான உத்திரா (26) என்பவருக்கும் ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பிறகு இருவரும் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள பல்லகவுண்டம்பாளையத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.ரஞ்சித்குமார் கட்டிட வேலைக்குச் சென்று வந்த நிலையில், உத்திரா அதே பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றி வந்தார். தினமும் காலையில் மனைவியை இருசக்கர வாகனத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு ரஞ்சித்குமார் வேலைக்குச் செல்வது வழக்கம். மாலையில் வேலை முடிந்து திரும்பும்போது மருத்துவமனைக்குச் சென்று மனைவியை வீட்டுக்கு அழைத்து வருவார்.

மருத்துவமனையில் இருந்து மாயமான இளம்பெண்
கடந்த 14-ஆம் தேதி காலையிலும் வழக்கம்போல் உத்திராவை மருத்துவமனையில் விட்டுவிட்டு ரஞ்சித்குமார் வேலைக்குச் சென்றார். அன்று இரவு மனைவியை அழைத்துச் செல்வதற்காக மருத்துவமனைக்குச் சென்றபோது, அவர் ஏற்கெனவே வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டதாக அங்கிருந்த ஊழியர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து வீட்டுக்குச் சென்று பார்த்தபோது உத்திரா அங்கு இல்லை. இதனால் பதற்றமடைந்த ரஞ்சித்குமார், உறவினர்கள் மற்றும் தெரிந்தவர்கள் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனைவியைத் தேடினார். ஆனால், அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.இதனால் கவலையடைந்த அவர், ஊத்துக்குளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த காவலர்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
கண்காணிப்பு கேமராக்கள் மூலம் விசாரணை
உத்திரா கடைசியாகப் பணியாற்றிய தனியார் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பாதையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை காவலர்கள் கைப்பற்றி ஆய்வு செய்தனர். மேலும், அவர் கடைசியாக யாருடன் பேசினார் என்பதைக் கண்டறிய அவரது கைப்பேசி அழைப்புப் பதிவுகளையும் ஆய்வு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
முட்புதரில் அழுகிய நிலையில் சடலம் மீட்பு
இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே உள்ள விஜயமங்கலம் சுங்கச்சாவடியை ஒட்டிய முட்புதரில் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு காவலர்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவலர்கள், அங்கு அழுகிய நிலையில் கிடந்த சடலத்தைப் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.உடல் கிடந்த இடத்தில் இருந்த ஆடைகள் மற்றும் அங்க அடையாளங்களை வைத்து ஆய்வு செய்தபோது, சடலமாக மீட்கப்பட்டது கடந்த 14-ஆம் தேதி காணாமல் போன உத்திரா என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றிய காவலர்கள், உடற்கூராய்வுக்காகப் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
நகைக்காகக் கொலை செய்தாரா? உடன் பணியாற்றியவர் கைது
இந்தக் கொலை தொடர்பாக காவலர்கள் மேற்கொண்ட விசாரணையில், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய உத்திராவை மர்ம நபர் கடத்திச் சென்று கொலை செய்து, அவரது உடலைக் காட்டுப்பகுதியில் வீசிச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து குற்றவாளியைக் கண்டறியத் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.உத்திரா கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலி காணாமல் போயிருந்ததால், நகைக்காக அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் முன்விரோதம் காரணமா என்ற கோணங்களில் காவலர்கள் விசாரணை நடத்தினர்.இதில், உத்திராவுடன் பணியாற்றி வந்த சரவணன் என்பவருக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைக் கைது செய்த காவலர்கள், கொலைக்கான காரணம் மற்றும் சம்பவத்தின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மனைவியின் உடலைப் பார்த்துக் கதறிய கணவர்; தற்கொலைக்கு முயற்சி
இதற்கிடையே, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்ற ரஞ்சித்குமார், மனைவியின் உடலைப் பார்த்துக் கதறி அழுதார். மனைவியின் மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் மனமுடைந்த அவர், மருத்துவமனை அருகே இருந்த மரக்கிளையில் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றார்.இதைக் கண்ட உறவினர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக ஓடிச்சென்று அவரை மீட்டனர். பின்னர், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவமும், அவரது மரணத்தால் துயரத்தில் தவித்த கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவமும் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Nurse murdered Tiruppur Husband attempts suicide after seeing wife body Coworker arrested