ரூ.400 கோடி போதைப்பொருள் பறிமுதல்: தவெக நிர்வாகி தொடர்பு குறித்து முதல்வர் விஜய் மவுனம் ஏன்...? - எடப்பாடி பழனிசாமி கேள்வி
400 crore drug seizure Why Chief Minister Vijay silent connection between tvk executive Edappadi Palaniswami questions
நாகை மாவட்டத்தைச் சேர்ந்த தவெக நிர்வாகி பூபாலனுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் போதைப்பொருள் பறிமுதல் விவகாரத்தில், முதல்-அமைச்சர் விஜய் இதுவரை விளக்கம் அளிக்காதது ஏன் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். சுமார் ரூ.400 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்த விவகாரம் குறித்து ஆளுங்கட்சி தலைமை பதிலளிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது,"கடந்த 18.10.2026 அன்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் சமீபத்திய ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சம்பவம் தமிழகத்துக்குத் தலைகுனிவை ஏற்படுத்துவதாக இல்லையா என்று முதல்-அமைச்சர் விஜயை அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புடன் தொடர்புடையதாகச் செய்திகள் தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர் என்ற முறையிலும், கட்சியின் தலைவராகவும் முதல்-அமைச்சர் விஜய் தனது கட்சி நிர்வாகி தொடர்புடையதாகக் கூறப்படும் இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிப்பார் என எதிர்பார்த்ததாகவும், ஆனால் இதுவரை அவர் மவுனம் காப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் ஜாபர் சாதிக் தொடர்புடைய வழக்கில், மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படும் சூடோஎபெட்ரின் என்ற மூலப்பொருள் சிக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதாக எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.தற்போதைய விவகாரத்தில், முழுமையாகச் செயலாக்கப்பட்ட படிக வடிவிலான மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் சுமார் 137 கிலோ அளவிலும், ரூ.400 கோடி மதிப்பிலும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
ஆளுங்கட்சியின் நிர்வாகி தொடர்புடையதாகக் கூறப்படும் விவகாரத்தில் இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் சிக்கியிருப்பதாகக் கூறப்படும் நிலையில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற முதல்-அமைச்சர் விஜய் இதுகுறித்து ஏன் பதிலளிக்கவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாகச் செய்தி வெளியிடும் ஊடகங்களைத் தவெக நாகை நகரச் செயலாளர் பால்ராஜ் மிரட்டுவதாகவும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.போதைப்பொருள் விவகாரம் குறித்து ஆளுங்கட்சித் தலைமைக்குத் தெரியுமா, கட்சியினரின் துணையுடன் இத்தகைய செயல்கள் நடைபெறுகின்றனவா என்ற கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.
கட்சி நிர்வாகி தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளிக்காமல் ஊடகங்களை மிரட்டுவதால் உண்மைகளை மறைத்துவிட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.மேலும், இந்தப் போதைப்பொருட்களைத் தமிழகக் காவல்துறை பறிமுதல் செய்யவில்லை என்றும், மத்திய அரசின் வருவாய் புலனாய்வு இயக்குநரகமே அவற்றைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றம் என்ற முழக்கத்துடன் ஆட்சிப் பொறுப்பேற்ற தவெக அரசு, இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும், முதல்-அமைச்சர் விஜய் இதுகுறித்து விளக்கம் அளிப்பாரா என்றும் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
400 crore drug seizure Why Chief Minister Vijay silent connection between tvk executive Edappadi Palaniswami questions