எப்போதும் ஒரே மாதிரி தான் பேசுவேன்! எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துகின்றன!பிரஸ் மீட்டில் கோபப்பட்ட வைகோ - Seithipunal
Seithipunal


எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் இருந்தே தமிழகத்தில் கொலைச் சம்பவங்கள் நடைபெற்று வருவதாகவும், ஒவ்வொரு ஆட்சிக் காலத்திலும் அவை அதிகரித்துள்ள நிலையில், தற்போது நடைபெறும் சம்பவங்களை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்துவதாகவும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் ஊழல் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணம் மதிமுகவுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார்.

திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணியான எஸ்ஐஆர் (SIR) மூலம் 13 கோடியே 30 லட்சம் மக்களின் அடிப்படை வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டினார். தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இந்த விவகாரத்தில் திமுக தனது பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தினார்.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணியில் திமுகவினர் முழுமையாக ஈடுபட்டதாகவும், ஆரம்பத்தில் எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிராக மௌனம் காத்த திமுக, நாடு முழுவதும் எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடைந்த பின்னரே குரல் கொடுக்கத் தொடங்கியதாகவும் வைகோ விமர்சித்தார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தன்னிச்சையாக வாக்காளர்களை நீக்கியதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், தமிழகத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டதற்குத் திமுகவும் பொறுப்பேற்க வேண்டும் என்பது அவரது கருத்தாக இருந்தது.

திமுக ஆட்சிக் காலத்தில் சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், ரூ.4,000 கோடி மழைநீர் வடிகால் திட்டம் தொடர்பான முறைகேடு குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் எழுந்தபோதும், கூட்டணி தர்மத்தைக் காப்பதற்காகத் தான் பொதுவெளியில் கடுமையாக விமர்சிக்கவில்லை என்று வைகோ தெரிவித்தார். அதே நேரத்தில், கட்சிக்குள் தனது எதிர்ப்புகளைத் தெரிவித்து வந்ததாகவும் கூறினார். தற்போதைய தவெக ஆட்சியில் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதுகுறித்தும் கருத்துத் தெரிவிப்பேன் என்றும், வைகோ எப்போதும் ஒரே நிலைப்பாட்டில்தான் இருப்பார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தவெக ஆட்சியில் பொதுப்பணித் துறை, பத்திரப்பதிவுத் துறை உள்ளிட்ட துறைகளில் கமிஷன் பெறும் நடைமுறை இல்லை என்றும், ஊழல் குறைந்துள்ளதாகவும் வைகோ தெரிவித்தார். ஊழலை முழுமையாக ஒழிப்பது இமயமலையை நகர்த்துவதற்குச் சமமான கடினமான பணி என்றாலும், தற்போதைய அரசு படிப்படியாக அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகக் கூறினார்.

கடந்த ஆட்சிக் காலங்களில் கமிஷன் வாங்கிப் பழகிய அதிகாரிகள், தற்போது அதற்கான வாய்ப்புகள் இல்லாததால் தவெக அரசைச் சீர்குலைக்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். இவை வைகோ முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் நடைபெறும் கொலைச் சம்பவங்கள் குறித்துப் பேசிய அவர், எம்ஜிஆர், ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி மற்றும் திமுக ஆட்சிக் காலங்களிலும் கொலைகள் அதிகரித்து வந்துள்ளதாகக் கூறினார். அதன் தொடர்ச்சியாகவே தற்போதும் குற்றச் சம்பவங்கள் நடைபெறுவதாகத் தெரிவித்த அவர், காவல்துறை குற்றங்களைத் தடுக்கவும், சம்பவங்கள் நிகழ்ந்ததும் நடவடிக்கை எடுக்கவும் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறினார்.

“படுகொலைகளை யாராலும் முழுமையாகத் தடுக்க முடியாது. எல்லாக் காலங்களிலும் நடைபெறும் சம்பவங்கள்தான் தற்போதும் நடக்கின்றன. ஆனால், எதிர்க்கட்சிகள் அவற்றைப் பெரிதுபடுத்திக் கூறுகின்றன. அது அவர்களுடைய உரிமை. அதே நேரத்தில், தவெக ஆட்சிக்கு எதிராகப் புழுதி வாரித் தூற்றுவதும், குற்றச்சாட்டுகளை மிகைப்படுத்துவதும் நடைபெறுகிறது” என்ற கருத்தை வைகோ முன்வைத்தார். திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற லாக்கப் மரணங்கள் குறித்து அக்கட்சி பேசவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.

குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் அனைத்துக் கட்சிகளிலும் இருக்கக்கூடும் என்றும், அத்தகையவர்கள் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார். அந்த வகையில், தவெகவும் தனது கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

மேலும், விலைவாசி உயர்வு என்பது சர்வதேச அளவில் நிலவும் பிரச்சினை என்றும், அனைத்து ஆட்சிக் காலங்களிலும் விலைவாசி உயர்வு இருந்து வந்துள்ளதாகவும் அவர் கூறினார். இதனை மாநில அரசால் மட்டும் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியாது என்றும் தெரிவித்தார். இறுதியாக, தமிழக வெற்றிக் கழக அமைச்சரவையில் இடம்பெற வேண்டும் என்ற எந்த எண்ணமும் மதிமுகவுக்கு இல்லை என்று வைகோ தெளிவுபடுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I always speak the same way The opposition parties are blowing things out of proportion Vaiko expressing anger at a press meet


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->