'டாக்டரும் இல்ல... நர்சும் இல்ல'...! நோயாளிக்கு இ.சி.ஜி மெஷினை மாட்டிய காவலாளி...! - அரசு மருத்துவமனையில் அம்பலமான அவலம்
No doctor No nurse guard who attached ECG machine patient plight government hospital exposed
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பற்றாக்குறை நீண்டகாலமாக நிலவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய மருத்துவ பணியாளர்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் பலமுறை வலியுறுத்தியும் இதுவரை தீர்வு எட்டப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 5-ஆம் தேதி இரவு நெஞ்சுவலி காரணமாக ஒருவர் சிகிச்சைக்காக ஆலங்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அப்போது இரவுப்பணியில் இரண்டு செவிலியர்கள் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால், மருத்துவமனையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி ரஞ்சித், நோயாளிக்கு இ.சி.ஜி. பரிசோதனை மேற்கொள்வது போல் செயல்பட்டு, அதன் பதிவுகளை எடுத்துச் செல்லும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே இதே மருத்துவமனையில் சில மாதங்களுக்கு முன்பு, சமையல் பணியில் இருந்த பெண் ஒருவர் காயமடைந்த நோயாளிக்கு தையல் போட்டதாக வெளியான காணொளி கடும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், தற்போது காவலாளி இ.சி.ஜி. பரிசோதனையில் ஈடுபட்டதாக பரவிய காணொளி மீண்டும் மருத்துவமனையின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கம் அளிக்கையில், "இ.சி.ஜி. பரிசோதனையை செவிலியரே மேற்கொண்டார். இரவு நேர பணிச்சுமை காரணமாக அவருக்கு உதவியாக மட்டுமே காவலாளி அருகில் நின்றிருந்தார். காவலாளி நேரடியாக இ.சி.ஜி. பரிசோதனையை மேற்கொள்ளவில்லை" என தெரிவிக்கப்படுகிறது.
English Summary
No doctor No nurse guard who attached ECG machine patient plight government hospital exposed